Follow us

Tuesday, 3 February 2026

ஜில்லு சிறுகதை – சுஜாதா


ஜில்லு சிறுகதை – சுஜாதா


 ஜன்னலுக்கு வெளியே தொடுவானத்தில் ஒரே ஒரு மேகம் கருப்புத் தீற்றலாகத் தெரிந்தது.ஆத்மா கதவைச் சார்த்தினான்

.வரப்போகிறது. தெரிந்துவிட்டது.அவர்கள் கணக்குப்படி சாயங்காலம் மழை வந்து விடும். அதற்குள் புறப்பட்டுவிட வேண்டும்.

திரும்பினான். நித்யா பெட்டியில் துணிகளை அடைத்துக் கொண்டிருந்தாள்.”சீக்கிரம் நித்யா!”

“எதை எடுத்துக்கறது எதைவிடறது?”

“மொத்தமே மூணு பேருக்கும் எட்டு கிலோதான். ரொம்ப அவசியமானதை மட்டும் எடுத்துக்க”

“அவசியமானதுங்கறது எது?”

அந்த கேள்விக்கு இந்த சந்தர்ப்பத்தில் ‘மூச்சு’ என்பதைத் தவிர ஆத்மாவிடம் வேறு பதில் இல்லை

தோருவின் வால்ட்டன் ஞாபகம்வந்தது.ஒன்றுமே தேவையில்லைதான் ,எல்லாமே புதுசாக அமைத்துக் கொள்ளலாம்.

ஆத்மா ஹாலைச் சுற்றிலும் நிதானமாகப் பார்த்தான்.பதினைந்து வருஷ மண வாழ்க்கையின் சேகரிப்புகள்.அவ்வப்போது

சந்தோஷம்,செய்தி,அறிவு,இதம் தந்த எத்தனை சாமான்கள்!ஸ்டீரியோவின் ஸ்பீக்கர்கள் இடம் வலமாக மௌனமாக நின்று கொண்டிருந்தன . உடன் இணைத்த காஸட் டெக் ப்ளேயர் ஒலி பெருக்கி.வண்ண ஜாக்கெட்டுகளில் உறைந்திருக்கும் மணிக் கணக்கான சங்கீதம். பீத்தோவன், பாஹ், ஹரிபிரசாத் சௌரஸ்யா எல்லாமே இப்போது தேவையில்லைதான்.அருகே
டைப்ரைட்டர் இருந்தது, ம்ஹூம் வேண்டாம். கவிதை அடிப்பதற்கு இதுவா சமயம்? அலமாரி நிறையப் புத்தகங்கள் இருந்தன

எதையாவது எடுத்துச் செல்லலாம். எதை? தொல்காப்பிய ஆராய்சசி, முக்கூடற்பள்ளு? பாண்டி நாட்டுத் திருப்பதிகள்? புதுக்கவிதை-நாலு கட்டுரைகள்?தமிழர் நாட்டுப்புற இயல் ஆய்வு? பாலையும் வாழையும்? பைபிள் ? திருக்குறள்?
எதை?

எல்லாமே இப்போது சப்தங்கள்,வெறும் சப்தங்கள்.

“குண்டுகள் எறிந்து
கூரைகள் எரித்து
பெண்டுபிள்ளை வயோதிகரைக்
கொன்று குவிப்பது
அன்றாடப் பொழுதுபோக்கு!”

“பாஸ்டர்ட்ஸ்!”என்று யாரையோ திட்டினான்.

“என்ன புஸ்தகம் எடுத்துக்கணும்”

“ஏதாவது எடுத்துக்கலாம் பிரயாணத்தில படிக்கறதுக்கு”

“என்ன, சீக்கிரம் சொல்லுங்க”

ஆத்மா மறுபடி அந்த அலமாரியை வருடினான்.”இது போதும்!”என்று ‘ராணி’ இதழைப் பெடடியின் மேல் போட்டான்.

“நகைப் பெட்டிகளை என்ன பண்றது?”

“எல்லாத்தையும் போட்டுண்டுவா.அங்க போனா வித்து மரவள்ளிக் கிழங்கு வாங்கலாம்”

நித்யா அவனைக் கலவரத்துடன் பார்த்தாள்.

“ஆளுக்கு மூணு செட்டு துணி வெச்சிருக்கேன்.குமாருக்கு ஸ்வெட்டர் எடுத்துக்கிட்டிருக்கேன்”

“இது என்ன பெரிசா?”

“நம்ம கல்யாண போட்டோ ஆல்பம் இதை விட்டுப் போக மனசு வரலை”

ஆத்மா அதைப் பிரித்தான்.ஒல்லி ஆத்மா.பொம்மை போல் நித்யா. மனசுக்குள் புன்னகை விரிந்தது.

“உன்னை நான் முதல்ல தொட்ட போது நடுங்கியது”.

நித்யா கவனிக்காமல் “பூட்டு போறலை.மொத்தமே நாலு பூட்டுத்தான் இருக்கு”

“பூட்டா? எதுக்கு?”

“வீட்டைப் பூட்டிட்டுப் போகவேண்டாம்?”

ஆத்மா கை தட்டிச் சிரிதது “பைத்தியமே பூட்ட வேண்டாம். திருடறதுககு ஒரு ஆள் கிடையாது

இந்த வீட்டில இருக்ற அத்தனையும் ஃபரிஜ்,ரேடியோ, டிவி, புஸ்தகங்கள், கித்தார் நாற்காலி, யானை பொம்மை எல்லாமே இங்கதான் இங்கயேதான் இருக்கப் போறது. நு‘று வருஷம் ஆனாலும் இங்கேதான் இருக்கப்போறது.ஆல்ஃபா கதிர்களிலும் பீட்டா துகள்களிலும் ஜொலிச்சுண்டு”

நித்யா சற்று நேரம் மௌனமாக இருந்தாள்.

“ஆத்மா நாம் எங்க போறம்?”

“யாருக்குத் தெரியும்? அரபிக் கடல்ங்கறாங்க,மினிக்காய்ங்கறாங்க லட்சத் தீவுங்கறாங்க. காத்துக்கு எதிர்ப்பக்கம் எங்கயாவது கூட்டிட்டுப் போவாங்க”

“முதலில் பம்பாய் போகணுமா?”

“பம்பாயா?அசடே! பம்பாய் காணாமப் போய்டுத்து.ஃபணால்!ப்ஷ்ஷ் ராட்சச நாய்க்குடை. இப்ப அங்க ஒருத்தரும் இல்லை.மெட்றாஸ் போச்சு.
டெல்லி போச்சு கல்கத்தா போச்சு நாம ஏதோ இந்த ஊர்ல மாற்றலாகி வந்து சேர்ந்தோம்! தப்பிச்சோம்! மழை துரத்தத் துரத்த ஓடிக்கிட்டே இருக்கலாம்! அதிர்ஷ்டம்!”

“அது அதிர்ஷ்டமா?” என்றாள் நித்யா.

“சரியான கேள்வி. பதில் தெரியலை. குமார் எங்கே-“.
“வெளியில விளையாடிட்டு இருக்கான். குமார்?”

குமார் உற்சாகத்துடன உள்ளே வந்து “அப்பா அப்பா ஏழு எலிகாப்டர். வந்து பாரேன்”என்றான் ஆத்மா மகனுடன் பால்கனிக்கு வந்தான். படப்படப்பட என்று சிறகு சுற்றி ஸ்டெபிலைசரின் க்றீ…ச்சுடன் அந்த இயந்திரப் பூச்சிகள் மைதானத்தில் இறங்குவதைப் பார்த்தான்.

“நித்யா, வந்துட்டாங்க சீக்கிரம் பாக் பண்ணு”

“அப்பா நாம எலிகாப்டரில் போகப்போறமா?”

“ஆமாடா கண்ணு”

“எங்க போறோம்?”

“து‘..ரத்துககு”

“ஸ்கூல் லீவா?”

“இனிமே லீவுதான்”

“எப்ப வருவோம்?”

“திரும்பி வரமாட்டோம்”

“ஏன்?”

“ஏன்னா பாக்கிஸ்தான் இல்லை பாக்கிஸ்தான்? அவாளும் சைனாவும் சேர்ந்துண்டு நம்மோடு சண்டை போட்டுட்டு டபால்னு நிறயப்பேர் செத்துப் போய்ட்டா! நாம இன்னும் செத்துப் போகலை-“

நித்யா உள்ளே இருநது “ரொம்ப காரியமா குழந்தைக்கு இதெல்லாம் சொல்லியே ஆகணுமா?”

“ஹ’ மஸ்ட் நோ நித்யா”

குமார் யோசித்து” அதுக்கு ஏன் ஊருக்குப் போறோம்” என்றான்.

“அவாள்ளாம் வெடிச்ச பட்டாசினால புகை நிறைய ஆய்டுத்து. அதில விஷம் நிறைய இருக்கு அது நம்மகிடட வந்துண்டிருக்கு”

“நாம அவாளை ஷ•ட் பண்ணலியா?”

“ம்! நாமும் ஷ•ட் பண்þ‘ம்.ஒரே தமாஷ். தீபாவளி மாதிரி வெடிச்சோம்.கராச்சி, ராவல்பிண்டி லாஹூர்,பீக்கிங்”

“ஏன் நிறுதிதிட்டோம்?”

“பட்டாசெல்லாம் தீர்ந்து போச்சு நிறுத்திட்டோம்”

“ஊருக்குப் போனதும் எனக்கும் வாங்கித்தாப்பா”

“என்னது?”

“ஆட்டம் பாம்”

ஆத்மா சிரித்தான்.”நீதாண்டா தலைவன்”

“குமார் குமார் உன் சமானெல்லாம் எடுத்துண்டியா?”

” ஆச்சு அம்மா” என்று சிறிதாகத் தன் பள்ளிப் பையைக் காட்டினான். அதனுள் ஸ்லேட்டுக்குச்சி, ரப்பர், பம்பரக் கயிறு,தீப்பெட்டி லேபல்கள்,ஸ்டாம்புகள் கண்ணாடிக் கோலி….

“இவ்வளவு தானா?”

“இவ்வளபுதாம்பா,ஜில்லுவுக்கு இடம் வேணும் இல்லையா?”

“என்னது? ஜில்லுவா?”

தன் பெய்ர உச்சரிக்கப் படடதை உணரந்து கடடில் அடியில் படுத்திருந்த ஜில்லு திடீர் என்று காதுகளை உயர்த்திக்கொண்டு வெளியே வந்து குமாரிடம் வந்த வாலை ஆட்டியது.

“ஜில்லு ஷேக்காண்ட்” ஒரு காலைத் து‘க்கியது.

இரண்டு கால்களில் நின்று நாலு தப்படி நடந்து காட்டியது. சின்ன நாய். பொம்மைபோல் கன்னங்கரேல் என்று கண்களுடன் சடைசடையாக வாசனையாக ஒரு சந்தோஷப் பந்தாக.
குமார் அதை தொம்சம் பண்ணினான். காதைப் பிடித்து இழுத்துக் கட்டிக் கொண்டு புரண்டு காலை வாரிவிட்டு குழந்தை செய்த அத்தனை ஹ’ம்சைகளை சட்டை செய்யாமல் அவனுடனேயே ஒட்டிக்கொண்டது. இரண்டு குழந்தைகள்.

“ஜில்லுஜில்லுஜில்லு.. அப்பா நாம ஜில்லுவையும் கூட்டிப்போறமில்லை”

“இல்லை கண்ணா விடடுட்டுப் போறம்”

“பொய் ! அம்மா கூட்டிடடுப் போலாம்னு சொன்னாளே”

“அம்மாதான் பொய் சொன்னா.இதபார் குமார், அந்த எலிகாப்டர்ல மனுஷாளுக்கே இடம் இல்லை ஜில்லுவை உள்ள விடமாட்டா”

குமார் உடனே அழ ஆரம்பித்தான் நாயைக் கட்டிக் கொண்டான் “நான் வரலை.”

“நீ வந்துதான் ஆகணும் இங்கே ஒருத்தரும் இருக்க மாட்டா”

“நானும் ஜில்லுவும் வீட்டில இருக்கோம் நீ போய்ட்டுவா”

நித்யா வந்து”என்ன சண்டை” என்றாள் குமார் ஏன் அழறே”

“அப்பா ஜில்லு வேணடாங்கறார்”

“யார் சொன்னா? ஜில்லுவை கூட்டிண்டுதான் போகப்போறோம் நீ உள்ளபோடா கண்ணா”

குமார் தீர்மானமின்றி கண்ணைத் துடைத்துக் கொண்டு நாயைக் கவலையுடன் அள்ளிக் கொண்டு உள்ளே சென்றான்.

ஆத்மா மைதானத்தில் இப்போதே க்யு அமைவதைப் பார்த்தான். ஹெலிகாப்டர்களும் இளைப்பாறிக்
கொண்டிருந்தன.

“எதுக்காகப் பொய் சொல்ற? குழந்தை கிட்ட நாயை அனுதிக்கமாட்டான்னு தெரியும். இல்லையா”

“அதை அவன் கிட்ட எதுக்கு சொல்லணும்? கடைசீ ல சமாதானப் படுத்தி அழைச்சுட்டு போகலாம்னு பார்த்தேன் நீங்க போட்டு உடைச்சுட்டிங்க”

” இல்லை நித்யா இந்த ஏமாற்றத்துக் கெல்லாம் அவனைத் தயார்ப்படுத்தணும்.சும்மா கனவுகளை சப்ளை செய்துக்கிட்டே இருக்கக் கூடாது.இன்றைய உலகம் என்னன்னு தெரிஞ்சுக்கணும்.நெஞ்சில் உறுதி வரணும்”

“ஆ..மாம் ஏழுவயசில இதெல்லாம் தேவையாக்கும்? இத பாருங்க,அவன் இன்னும் குழந்தை. நாயை வுட்டுட்டுப் போறம்னு தெரிஞ்சா தாங்க மாட்டான்.அது மேல அவனுக்கு உசிரு ஜுரம் வந்துரும்.கடைசில சொல்லி எப்படியாவது சரிக்கட்டிடலாம்.. நாயைக் கூட்டிட்டுப் போறம்னே சொல்லுங்க”

இன்னும் இரண்டு மணி நேரம்.

அறைக்குள்ளிருந்து “ஜில்லு பயப்படாதே.. நான் அழைச்சுட்டுப் போறேன் உன்னை விடமாட்டேன். விடாட்டா அவாளை ஷ•ட்
பண்ணிடலாம்”

நித்யா திடீர் என்று “இப்படி செஞ்சா என்ன?”எனறாள்.

“என்ன?”

“பொட்டில இடம் இருக்கு பேசாம ஒரு துண்டில சுத்தி..”

“ம்ஹும் கத்திக் கத்தி செத்துப் போய்டும்.”

“கைல ஒரு கூடை வெச்சக்கலாமில்லையா?”
“இதபார் நித்யா அனாவசியமா காம்ப்ளிக்கேட் பண்ணாதே.விட்டுட்டுப் போயிரலாம்.
சாப்பாட்டுக்குத் தவிக்கும். வெள்ளைக்காரனா இருந்தா சுடடுட்டுப் போய்டுவான்”

“எனக்குக் கூட இந்த சனியனை விட்டுட்டுப் போறதில இஷ்டமே இல்லை”

“என்ன செய்யறது? தேவடியா பசங்க அவசரப் பட்டு விபரீதம் பண்ணிட்டாங்களே?”

“ஆத்மா ப்ளீஸ்”

அவர்கள் கிளம்பும்போது மணி ஐந்து. அந்தக் கருமேகம் கொஞ்சம் பெரிசாகி இருந்தது.
ஆத்மாவும் நித்யாவும் குமாரும் வெளியே வந்து நின்றார்கள்.தனியான திறந்த வீட்டை, மல்லிகைப் பந்தலை, மாமரத்தை, மகிழ மரத்தை, கதவருகில் நீலத்தில் ஆர் எஸ் ஆத்மா என்ற சிறிய பெயர்ப் பலகையை ஒரு முறை கடைசியாகப் பார்த்தான்.

“காஸை மூடினேனோ ஞாபகமில்லை!” என்றாள்.

“சட்! வா. காஸ் மூடினா என்ன திறந்தா என்ன”
ஒரு பெட்டி, ஒரு சிறிய கூடை கூடை!

“ஏய் கூடைக்குள்ள என்ன?”
Jillu “நீங்க பேசாம வாங்க ஜில்லு தூங்கறது சமாளிச்சுரலாம்”

“இதபாரு, வம்பு வீண் வம்பு கூடையைத் திறந்து பார்ததா அசிங்கமாப் போய்டும்!வேண்டாம் வுட்டுரு” என்று கூடையைப் பிடுஙகினான்.குமார் வீறிட ஆரம்பித்தான்.

“விடுஙகோ நான் சமாளிக்கிறேன்.அவா ஒண்ணும் செக் பண்றதில்லையாம்”

ராணுவத்தின் மூன்று டன் வண்டி ஒன்று வந்து நின்றது.

“கமான் க்விக் க்விக்” என்று ஒரு சீருடைக் குரல் கேட்டது.

ஆத்மாவும் நித்யாவும் குமாரும பெட்டியும் கூடையுமாக ஏறிக்கொள்ள வண்டி புறப்பட ஆத்மா அந்த முகங்களைப் பார்த்தான்.கவலை முகங்கள். எதிர்காலம் அறியாத முகங்கள். எங்கே போகிறோம் எங்கே நிற்போம் ,எந்த திசை, எந்த மண் எதுவும் தெரியாமல்.. வண்டி ஆடி ஆடி மைதானத்தை நெருங்கியது. ஆத்மா கூடையை அடிக்கடி கவலையுடன் பார்த்துக் கொண்டிருநதான்.
மைதானத்தில் இறங்கி மெல்ல நகரும் வரிசையில் ஒட்டிக் கொண்டார்கள்.ராணுவ உடையில் அதிகாரிகள் மேலும் கீழும் நடந்து கொண்டிருந்தார்கள்.ஏழு ஹெலிகாட்ர்களிடமும் ஏழு வரிசைகள் இருந்தன. நகரத்தின அத்தனை பேரும் வித்தியாசங்கள் இன்றி சற்றே தவிப்புடன் சற்றே அவசரத்துடன் அந்தப் புரியாத வாசலில் தடுமாறி ஏறிக் கொண்டிருந்தார்கள் இளம் ராணுவ அதிகாரிகள் வயதானவர்களைத் து‘க்கி ஏற்றிக் கொண்டிருந்தார்கள். நிற்பவர்கள், டப்பவர்கள்,சக்கர நாற்காலிகள்,கைத்தடிகள்,ஏழைகள் குழந்தைகள் .. நகரம் முழுவதும் இன்னும் ஒரு மணி நேரத்தில்
காலியாகிவிடும்.

ஆத்மாவும் நித்யாவும் குமாரும் மெல்ல மெல்ல அந்த இயந்திரப் பறவையை அணுக அணுக அவன் இதயம் தவித்தது.எப்படியாவது உள்ளே சென்று ஏறிக்கொண்டு விட்டால்,கிளம்பி விட்டால் அப்புறம் அசட்டு சிரிப்பு சிரித்து சமாளித்து விடலாம்.

அருகே அருகே

“ஒரு பெட்டிதானே” என்றார் அதிகாரி.

“ஒரு பொட்டி இந்தக் கூடை” அதன் மேல் துண்டு போட்டு மூடியிருந்தது.

ராணுவ அதிகாரி பெட்டியை குத்து மதிப்பாகத் து‘க்கிப்பார்த்து “போங்க உள்ளே சீக்கிரம்”

“அப்பாடா”

நித்யா கூடையைத் து‘க்கிக் கொண்டாள்.அந்த சமயம் அதனுள் உறங்கிக் கொண்டிருந்த ஜில்லு கீச்சுக்குரலில் முனக ஆரமபித்தது.

“சீக்கிரம் ஏறு நித்யா”

இப்போது ஜில்லு ஸ்பஷ்டமாக ஊளையிட ஆரம்பித்தது.

“ஜஸ்ட் எ மினிட் மேடம்”

அதிகாரியின் உப அதிகாரி அவளிடமிருநது கூடையைப் பிடுஙகிக்கொண்டார்.சடுதியில் அதன் மேலிருந்த துணியை விலக்கினார்.

“நாய்!” ஜில்லுவைப் பொறுக்கி மேஜைமேல் வைத்தார்.

“மைகாட் யார் நாய்யா இது”
ஆத்மா “ஆபிஸர் இட்ஸ் லைக் திஸ் என் பையன்..”

“ஏன்யா உங்களுக்குப் படிச்சு படிச்சு சொல்லலை? லவுட் ஸபீக்க்ரல சொல்லலை?வீடு வீடா வந்து சொல்லலை? மிக அவசியமான பொருள்களை மட்டும் எடுத்துட்டு வரணும்னுட்டு.

நாய்! காட்! வாட் ஸ்டுபிடிட்டி ஐ ஸே”

“ஆபிசர் நான் சொல்றதைக் கேளுங்க்ஷக என் பையன்”

“லுக் மிஸ்டர உன்னோட வாதாடிக்கிட்டிருக்க நேரமில்லை.ஹெலிகாப்டர் புறப்பட்டாகணும்.
அத பாருங்க மேகம்..கதிரியக்க மழை வந்துகிட்டு இருக்கு. நாம எல்லோரும் சாவில இருந்து சிலமைல் து‘ரமே இருக்கோம மனுஷஙகளுக்கே இடமில்லை. நாயைக் கூட்டி வரேங்கறியே! உனக்கு இப்ப சலுகை தந்தா அந்தளு பியானோ எடுத்துக்கிட்டு வரேம்பான் இன்னொருத்தன் என் பசு மாட்டை ஏன் விடணும்பான் நாம எல்லாம் உயிர் வாழறதுக்கு ஓடிக்கிட்டு இருக்கோம்.

உங்களுக்கு எட்டு கிலோ சலுகை கொடுத்ததுக்கே ஸ’ ஓ என்னைக் காச்சறார். முடியாது நாயை அனுமதிக்க முடியாது”

“இது எங்க குழந்தை மாதிரி ஸார் ” என்றாள் நித்யா.

“உள்ளபோங்க உள்ளபோங்க .நாய் கிடையாது. அடுததது அடுத்தது”

“படு பாவிப் பசங்களா” என்றான் ஆத்மா

“என்னது?” Description: சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள் | Read ...

“உங்களாலதானடா சண்டை வந்தது”

“பொறுப்பில்லாம அவசரப் பட்டு அவன் மேல அணுகுண்டைப் போட்டுட்டு அவன் திரும்பிப் போட்டு உங்க மாதிரி ராட்சசப் பிரஜைகளோட அவசரப் போக்கினாலதானே,கொலை வெறியினாலதானே சண்டை வந்து நாங்க,ஒண்ணுமே தெரியாதவங்க மாட்டிக்கிட்டு இறந்து போயி பிரிஞ்சு போயி இப்ப ஊர் ஊரா எல்லாத்தையும் துறந்து ஓட வேண்டியிருக்கு ப்ளடி மிலிட்டரி ராஸ்கல்ஸ் !பாஸ்டர்ட்ஸ்”

ஆத்மாவின் கன்னத்தில் பளேர் என்று அறை விழுந்தது

“லுக் மிஸடர் ! நாங்க இல்லை காரணம். தலைவர்கள்தான்! ஹால் ஹ’ம் அப் ஐஸே”

ஆத்மா குண்டுக் கட்டாக து‘க்கப்ட்டு உள்ளே திணிக்கப் பட்டான் .நித்யாவும் ஏற்றப்பட்டு அவசர அவசரமாக மற்றவர்கள் ஏற்றப்பட்டு இறதியில் ராணுவ அதிகாரிகள் ஏறிக் கொள்ள கதவு மூடப்பட்டு மண்டைச் சிறகுகள் சுற்ற ஆரம்பித்து சுழற்சி அதிகமாகி ஹெலிகாப்டர்கள் ஒவ்வொன்றாக சாய்வுப் பாதையில் உயர்ந்தன.

“ஆத்மா வலிக்கிறதா?” என்றாள் நித்யா.

ஏகப்பட்ட ஜனங்கள் அடைந்திருந்தார்கள். நித்யாவும் ஆத்மாவும் ஒரு ஓரத்தில் பதிய
நின்று கொணடு மேலே கிடைத்ததைப் பற்றிக் கொள்ள ஹெலிகாப்டர் மேலே மேலே செல்ல,வயிற்றுக்குள் பயப் பந்து சுருட்டிக் கொள்ள

“குமார் நாம் ஊருக்குப் போனதும் வேற நாய் வாங்கிக்கலாம் ” என்றான் ஆத்மா.

“குமார்?”

“ஏய் குமார்! நித்யா குமார் எங்கே?”

“உங்க கூடத்தானே இருந்தான்”

“இல்லையே உன் கையைன்னா பிடிச்சிட்டிருந்தான்”

“குமார் ? குமார்! குமா ஆஆஆஆ ர்!”

நித்யாவின் அலறல் அந்த மெஷ’ன் படபடப்பில் கரைந்தது.

“அய்யா அய்யா என் மகன். என் மகனை விட்டுட்டோம். திறங்க. கதவை திறங்க” என்று ஆத்மா மோதினான். ஒரு வலுவான கரம் அவனை அடித்து வீழ்த்திப் பிடித்தது.

ஹெலிகாப்டர்கள் வானத்தில் புள்ளிகளாக மறைய குமார் பெஞ்சின் அடியில் பதுங்கியிருந்தவன் ஜில்லுவைத் தடவிக் கொடுத்துக்கொண்டே வெளியே வந்தான்.

“கவலைப்படாதே ஜில்லு.அப்பா அம்மா ஊருக்குப் போய்ட்டு வந்துருவா.நாம வீட்டுக்குப் போகலாம் வா”

சிறுவனும் நாயும் மெல்ல உற்சாகமாக நடந்து செல்ல யாருமில்லாத பிஸ்கட் கடையில் அடுக்கி வைத்திருந்த பிஸ்கட்களில் நிறைய எடுத்துக்கொண்டு ஜில்லுவுக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டுவிட்டு வீட்டை நோக்கி நடக்கையில்……

Thursday, 19 December 2024

மூக்கைப் பிள்ளை வீட்டு விருந்து சிறுகதை

மூக்கைப் பிள்ளை வீட்டு விருந்து சிறுகதை.



 ரவர சில சுகவாசிகள் இதையெல்லாம் ஒழுங்காகச் செய்வதில்லை. சும்மா தலையைக் காட்டி விட்டுத் திரும்பி விடுவார்கள். மூக்கப்பிள்ளையின் வழக்கமும் அதுதான்.


ஆனால் ‘ஊர் வழக்கம்’ ஒன்றை அவர் தட்ட முடியாமல் போயிருந்தது. ஒரு வீட்டில் கல்யாணம் நடந்தால் பல தினங்களுக்குப் பிறகு ‘நல்ல மாசத்துப் பழம்’ என்று வாழைப் பழங்களும் சிறிது சீனியும் ஊர் பூராவுக்கும் வழங்குவார்கள். “மறு வீடு வீட்டுப் பலகாரம்” என்று மைசூர் பாகு, லட்டு மற்றும் சில இனிப்புத் தினுசுகள், முறுக்கு, மிக்ஸர் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் வைத்து சொந்தக்காரங்களுக்கு (சொக்காரங்களுக்கு) வழங்குவர். இது “ஊர் வழக்கம்” ஆகும்.


பெரியவர் யாராவது இறந்து போனால். மகன் அல்லது பேத்தி ஊருக்கு ‘கடலை போடுவது’ வழக்கம். அரைப்படி கடலை – வசதி மிகுந்தவர்கள், 1 படி கடலை கூட – ‘ஊர் வழக்கம்’ ஆக உறவுக்காரர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைப்பார்கள்.


அநேகமாக எல்லா வீட்டாரும் இம்மாதிரி ‘ஊர் வழக்கங்களைத் தட்டாமல் வாங்கிக் கொள்வார்கள், ஒன்றிரண்டு பேர்தான்,’ நாங்கள் என்னத்தைத் திரும்பச் செய்யப் போகிறோம் எங்களுக்கு ஊர் வழக்கம் வேண்டாம்’ என்று மறுத்து விடுவார்கள்.


மூக்கப்பிள்ளை ஒன்றிரு தடவைகள் மறுத்துப் பார்த்தார். ‘வழக்கம்’ கொண்டு வருகிற பெண்கள். “சும்மா வாங்கித்தின்னு வையிங்க, ஊர் வழக்கத்தை விடுவானேன்?” என்று கொண்டு வந்ததை அவர் வீட்டிலேயே வைத்துவிட்டுப் போனார்கள். அதன் பிறகு அவர் மறுத்ததில்லை, சடங்கு வீடுகளிருந்து ‘சர்க்கரைப் பொங்கல்’ (பாச்சோறு) வரும், கோயில் திருவிழாக்காலங்களில் புளியோதரை. பருப்புப் பொங்கல். சர்க்கரைப் பொங்கல். சுண்டல் பிரசாதம் வரும். கல்யாண வீட்டுப் பணியாரங்கள் வரும்.


“சும்மா சாப்பிட்டு வையிங்க’ என்று பெண்கள் தாராளமாகக்

கொடுத்து விட்டுப்போனார்கள்,


இதை எல்லாம் வாங்குறமே நாம ஊராருக்கும் உறவுகாரங்களுக்கும் திருப்பிச் செய்ய சந்தர்ப்பம் வரவா போகுது? என்று அவர் மனம் ஆதியில் குறுகுறுத்தது. ‘இதுக்காகவே. வசை இருக்கப்படாதுன்னே. நான் விசேஷ வீடுகளில் சாப்பிடுகிறது இல்லை, நம்ம வீட்டிலே என்ன

விசேஷம் வரப்போகுது, நாம ஊர் கூட்டிச் சாப்பாடு போடப்போறோம்’ என்று அவர் எண்ணினார்.


ஆனாலும் போகப் போக அவருடைய மனமும் ஆட்சேபிக்கவில்லை. மூக்கப்பிள்ளையும் ‘ஊர் வழக்கங்களை வாங்கி அனுபவித்துக் கொண்டிருந்தார்.


இப்போது அவருடைய மனசாட்சி உதைத்துக் கொண்டது, தொந்தரவு கொடுத்தது.


முந்திய தினம் ஒரு வழக்கம் வந்தது, வசதியான வீடு, ‘மறுவீடு வீட்டுப் பலகாரம்’ என்று நிறையவே கொடுத்து அனுப்பியிருந்தார்கள். இனிப்புகளும் காரங்களுமாய் வகை வகையான தின்பண்டங்கள்.


‘எனக்கு வேண்டாம்; இனிமே நான் ஊர் வழக்கத்தை வாங்கப் போறதில்லே’ என்று அறிவித்தார் மூக்கப்பிள்ளை.


‘இதென்ன புது வழக்கம்? எப்பவும் போலே வாங்கி வையுங்க, பலகாரமெல்லாம் தினுசு தினுசாயிருக்கு; சும்மா சாப்பிடுங்க, நான் வேணும்னா காப்பி போட்டுத் தரட்டுமா?’ என்றாள் அதைக் கொண்டு வந்தவள். அவள் கொஞ்சம் வாயாடி.


அங்கே அப்படி, இங்கே இப்படி என்று வாயடி அடித்து, கொண்டு வந்ததை அவருக்கே விட்டு விட்டுப் போனாள்.


அதுமுதல் அவர் மனம் அரித்துக் கொண்டேயிருந்தது.


இதெல்லாம் ‘வட்டி இல்லாக் கடன்’ என்பாக. இப்ப ஒருத்தர் செய்தா, மற்றவர் பிறகு எப்பவாவது திரும்பச் செய்யணும். அவர் இல்லாவிட்டாலும், அவர் பேரைச் சொல் அவருடைய மகனோ மகளோ பேரப்பிள்ளைகளோ செய்வாங்க. எதுவுமே செய்யாத என் போன்றவர்கள் – நானாக எதுவும் ஊருக்குச் செய்யப் போவதில்லை. எனக்குப் பிறகு என் பேராலே செய்றதுக்கும் யாருமில்லை. அப்படி இருக்கையிலே ஊர் வழக்கங்களை வாங்கி அனுபவிப்பது எப்படி நியாயம் ஆகும்?…


ஒருத்தர் இல்லாவிட்டால் இன்னொருவர் எப்பவாவது பழிச்சொல் உதிர்ப்பாங்க. பொம்பிளைகள் சில சமயம் வசையாப் பேசுறதும் வழக்கமாகத்தானே இருக்கு – நாங்க அதைச் செய்தோம், இதைச் செய்தோம் ஊர்க்காரங்க வயணமா வாங்கிச் சாப்பிட்டாங்க. இந்த ஊரு எங்களுக்கு என்ன செஞ்சுதுயின்னு நீட்டி முழக்குவாங்க…


சிலபேரைப் பற்றிச் சில சமயங்களில் அநேகர் பேசுவது உண்டே! ஊர் சாப்பாடுன்னு சொன்னா பந்திக்கு முந்தி வந்திருவான். வாய்க்கு ருசியா வழிச்சு வழிச்சுத் தின்பான். ஒரு கல்யாண வீடு கருமாதி வீடு எதையும் விட்டுவிடமாட்டான். அவன் வீட்டிலே இதுவரைக்கும் எந்த விசேஷமும் செய்ததில்லை. யாருக்கும் சாப்பாடு போட்டதில்லே. என்னத்தைச் செய்யப்போறான்? அப்படியே செய்தாலும், ரொம்பச் சுருக்கமாச் செய்து ஊர்ச்சாப்பாடு போடாம ஒப்பேத்திடுவான்.


இப்படி நினைக்க நினைக்க மூக்கப்பிள்ளையின் மனம் சங்கடப்படலாயிற்று.

கூப்பிட்டு சிவபுரம் சுகவாசிகள் எல்லோர் வீட்டுக்கும்போய் “சித்திரா பௌர்ணமி சித்திரான்னச் சிறப்புச் சாப்பாடு” பற்றிச் சொல்லி அழைக்கும்படி ஏற்பாடு.


வீட்டில் விளக்குகளை ஏற்றி வைத்துக்கொண்டு இலைகளை ரெடி பண்ணி வைக்கச் சொன்னார், ஆட்கள் ஏழுமணி முதல் தயாராக இருந்தார்கள்.


ஆனால். அழைக்கப்பட்ட நபர்களில் ஒருவர் கூட வரவில்லை.


மணி எட்டு….. எட்டரை….. ஒன்பது என்று ஓடியது. ஊகூம் ஒரு ஆளைக் கூடக் காணோம்.


மூக்கப்பிள்ளை மனம் குமுறிக் கொண்டிருந்தது. அவர் முகம் ‘என்னமோ மாதிரி’ மாறிவிட்டது. வீட்டில் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார்.


ஒன்பதே கால்…..


திரும்பவும் ஆறுமுகத்தை அனுப்பி வைத்தார்.


சுகவாசிகள் மிகுந்த சிவபுரத்தில் விசேஷமான பழக்க வழக்கங்கள், கட்டுப்பாடுகள், எத்தனையோ உண்டு. ஒரு வீட்டில் விசேஷம், விருந்து என்றால் ஊரார் எதிர் பார்க்கிற சம்பிரதாயங்கள் பலவாகும்.


முதல் விசேஷ வீட்டுக்காரரே நேரில் ஒவ்வொருவரையும் கண்டு விஷயத்தைச் சொல்அழைக்கவேண்டும். “சாப்பாட்டையும் நம்ம வீட்டிலேயே வச்சுக்கிடுங்க” என்று வற்புறுத்தவேண்டும். விசேஷ நாளுக்கு முதல் நாள் அழைப்புக்காரன் வீடு வீடாகப் போய், ‘நாளைக்கு இன்னார்’ வீட்டு விசேஷம் – தாம்பூலத்துக்கும் சாப்பாட்டுக்கும்

அழைச்சிருக்கு’ என்று சொல்ப் போக வேண்டும். அப்புறம் விசேஷத்தன்று சாப்பாட்டு நேரத்தில் “ஐயா, சாப்பாட்டுக்கு வாங்க. இலை போட்டாச்சு’ என்று அறிவிக்க வேண்டும்.


சுகவாசி வருகிறாரோ வரவில்லையோ. அழைக்கத் தவறக்கூடாது. அழைப்பு விட்டுப் போனால் அதுபெரும் தவறாகக் கருதப்படும்.


ஊர் மரபு அப்படி இருக்கையில்.


இந்த மூக்கப்பிள்ளை என்ன நெனச்சுப்போட்டான்? பெரிய லார்டு ரிப்பன் பேரனோ? வீட்டில் இருந்துகிட்டு ஆள் மூலம் சொல்லி அனுப்புவானாம் நாம் ஓடிப்போகணுமாம் சாப்பிடறதுக்கு! நாம என்ன சோத்துக்கு அலைந்து போயா கிடக்கிறோம்? என்று கொதிப்புற்றனர் சிலர்.


‘இந்த மூக்கப்பிள்ளை புத்தி போனதைத்தான் பாரேன். சித்ரா பௌர்ணமி-நயினார் நோன்பு – வருஷத்திலே ஒரு நாள் விரதம் ஆச்சே? இட்லி உப்புமா இப்படிச் சாப்பிடுவாங்களா? சோறு வகைகளைத் தின்னப் போவாங்களா?” என்றனர் சில பேர்.


‘அவன் யார் வீட்டு விருந்துக்கு வந்தான். நாம அவன் அழைச்ச உடனே அவன் வீட்டுக்குப் போகணும் என்பதுக்கு? என்று கேட்டார்கள் பலர்.


ஆறுமுகம் இதை எல்லாம் மூக்கப்பிள்ளையிடம் ரிப்போர்ட் பண்ணினான்.


தவசிப் பிள்ளைகளும் பரிமாறரெடியாக நின்றவர்களும் பிள்ளையையும் சித்திரான்ன வகைகளையும் மாறி மாறிப் பார்த்தார்கள். இவ்வளவு ஏற்பாடுகளும் வீணாச்சுதே என்ற மனச்சுமை அவர்களுக்கு.


மூக்கப்பிள்ளை தொண்டையைச் செருமினார். ஆறுமுகம் என்றார்.


“ஐயா!’ என்றான் அவன் பணிவோடு.


‘உனக்கு அழைப்புக் கூலி ரெண்டு ரூபாயா? ரெண்டு தரம் அழைச்சிருக்கே நாலு ரூபாயாச்சு. இன்னும் ரெண்டு ரூபா வாங்கிக்கோ. இந்த ஊர் பெரியவாள்களும் பிரமுகர்களும் தானே

நம்ம வீட்டு விருந்துக்கு வரமாட்டோம்னு சொல்ப் போட்டாக! போகட்டும், நீ வடக்கூர், கீழுர் பக்கம் போயி, அங்கே உள்ள ஏழை எளிய பிள்ளைகளை எல்லாம் இங்கே வரச்சொல்லு. ஐயா வீட்டிலே நயினார் நோன்பு பூசை. சித்திரான்ன பிரசாதம்னு சொல்லி அனுப்பு. வருஷத்திலே ஒரு நாள்! அதுக புதுமையா, திருப்தியாச் சாப்பிடட்டும்… நீயும் வயிறாரச் சாப்பிடு. நீ சாப்பிட்ட பிறகு போனாப் போதும், வே, இலையைப் போடும். எனக்குப் பரிமாறும்! திண்ணையிலே இலை போட்டு ஆறுமுகத்துக்கும் பரிமாறும் என்று மிடுக்காக உத்திரவிட்டார்.


‘செய்தது எதுவும் வீணாகி விடாது!’ என்றார் அவர். தவசிப் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்வது போல.


இருக்கிறசுகவாசிகளுக்கே மேலும் மேலும் விருந்தளிப்பதை விட, ஏழை எளியதுக வயிற்றுக்குச் சோறு போடுவது ரொம்பப் பெரிய விஷயமாக்கும்!


இப்படிப் பொன்மொழி தீட்டிக் கொண்டது மூக்கப்பிள்ளை மனம்.



Tags - வல்லிக்கண்ணன் கதைகள், தமிழ் கதைகள், நன்னெறி கதைகள், சிறுகதைகள் ,மூக்கைப் பிள்ளை வீட்டு விருந்து சிறுகதை.

Monday, 26 February 2024

செவ்வாழை சிறுகதை - அறிஞர் அண்ணா

 

செவ்வாழை சிறுகதை 

அறிஞர் அண்ணா



செங்கோடன், அந்தச் செவ்வாழைக் கன்றைத் தன் செல்லப் பிள்ளைபோல் வளர்த்து வந்தான். இருட்டுகிற நேரம் வீடு திரும்பினாலும்கூட, வயலிலே அவன்பட்ட கஷ்டத்தைக்கூடப் பொருட்படுத்தாமல், கொல்லைப்புறம் சென்று, செவ்வாழைக் கன்றைப் பார்த்துவிட்டு, தண்ணீர் போதுமானபடி பாய்ச்சப்பட்டிருக்கிறதா என்று கவனித்து விட்டுத்தான், தன் நான்கு குழந்தைகளிடமும் பேசுவான். அவ்வளவு பிரேமையுடன் அந்தச் செவ்வாழையை அவன் வளர்த்து வந்தான். கன்று வளர வளர அவன் களிப்பும் வளர்ந்தது. செவ்வாழைக்கு நீர் பாய்ச்சும் போதும், கல் மண்ணைக் கிளறிவிடும்போதும், அவன் கண்கள் பூரிப்படையும் மகிழ்ச்சியால், கரியனிடம் -அவனுடைய முதல் பையன், காட்டியதைவிட அதிகமான அன்பும், அக்கரையும் காட்டு கிறாரே என்று ஆச்சரியம், சற்றுப் பொறாமைகூட ஏற்பட்டது, குப்பிக்கு.


''குப்பி! ஏதாச்சும் மாடுகீடு வந்து வாழையை மிதிச்சிடப் போகுது, ஜாக்ரதையாக் கவனிச்சுக்கோ. அருமையான கன்று-ஆமாம், செவ்வாழைன்னா சாமான்யமில்லே. குலை, எம்மாம் பெரிசா இருக்கும் தெரியுமோ? பழம், வீச்சு வீச்சாகவும் இருக்கும். உருண்டையாகவும் இருக்கும்--- ரொம்ப ருசி--- பழத்தைக் கண்ணாலே பார்த்தாக்கூடப் போதும்; பசியாறிப் போகும்'' என்று குப்பியிடம் பெருமை யாகப் பேசுவான் செங்கோடன்.

அப்பா சொல்லுவதை நாலு பிள்ளைகளும் ஆமோதிப் பார்கள்--- அதுமட்டுமா-பக்கத்துக் குடிசை, எதிர்க் குடிசைகளிலே உள்ள குழந்தைகளிடமெல்லாம், இதே பெருமை யைத்தான் பேசிக் கொள்வார்கள். உழவர் வீட்டுப் பிள்ளைகள், வேறே எதைப் பற்றிப் பேசிக் கொள்ள முடியும்.  அப்பா வாங்கிய புதிய மோட்டாரைப் பற்றியா, அம்மாவின் வைரத்தோடு பற்றியா, அண்ணன் வாங்கிவந்த ரேடியோவைப் பற்றியா, எதைப் பற்றிப் பேசமுடியும்? செவ்வாழைக் கன்றுதான், அவர்களுக்கு, மோட்டார், ரேடியோ, வைர மாலை, சகலமும்!

மூத்த பயல் கரியன்', 'செவ்வாழைக் குலை தள்ளியதும், ஒரு சீப்புப் பழம் எனக்குத்தான்' என்று சொல்லுவான்".

''ஒண்ணுக்கூட எனக்குத் தர மாட்டாயாடா-நான் உனக்கு மாம்பழம் தந்திருக்கிறேன்? கவனமிருக்கட்டும். வறுத்த வேர்க்கடலை கொடுத்திருக்கிறேன்; கவனமிருக்கட் டும்" --என்று எதிர்க் குடிசை எல்லப்பன் கூறுவான்...

கரியனின் தங்கை, காமாட்சியோ, கண்ணைச் சிமிட்டிக் கொண்டே ''உனக்கு ஒரு சீப்புன்னா, எனக்கு இரண்டு தெரியுமா? அம்மாவைக் கேட்டு ஒரு சீப்பு, அப்பாவைக் கேட்டு ஒரு சீப்பு'' என்று குறும்பாகப் பேசுவாள்.

மூன்றாவது பையன் முத்து, ''சீப்புக் கணக்குப் போட்டுக்கிட்டு ஏமாந்து போகாதிங்க.  ஆமா-பழமாவதற்குள்ளே யாரார் என்னென்ன செய்துவிடுவாங்களோ, யாரு கண்டாங்க'' என்று சொல்லுவான்-வெறும் வேடிக்கைக் காக அல்ல--திருடியாவது மற்றவர்களைவிட அதிகப்படியான பழங்களைத் தின்றே தீர்த்து விடுவது என்று தீர்மானித்தே விட்டான்.

செங்கோடனின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வந்தது செவ்வாழை, உழைப்பு அதிகம் வயலில். பண்ணை மானேஜரின் ஆர்ப்பாட்டம் அதிகம். இவ்வளவையும் சகித்துக் கொள்வான்- செவ்வாழையைக் கண்டதும் சகலமும் மறந்து போகும். குழந்தைகள் அழுதால், செவ்வாழையைக் காட்டித்தான் சமாதானப்படுத்துவான்! துஷ்டத்தனம் செய்கிற குழந்தையை மிரட்டவும், செவ்வாழையைத்தான் கவனப்படுத்துவான்! குழந்தைகள் பிரியமாகச் சாப்பிடுவார்கள், செவ்வாழையை என்ற எண்ணம் செங்கோடனுக்கு. பண்ணை வீட்டுப் பிள்ளைகள் ஆப்பிள், திராட்சை தின்ன முடிகிறது--கரியனும் முத்துவும், எப்படி விலை உயர்ந்த அந்தப் பழங்களைப் பெற முடியும்? செவ்வாழையைத் தந்து தன் குழந்தைகளைக் குதூகலிக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணந்தான், செங்கோடனை, அந்தச் செவ்வாழைக் கன்றைச் செல்லமாக வளர்க்கும்படிச் செய்தது. உழவன் செங்கோடனிடம், எவ்வளவு பாடு பட்டாலும், குழந்தைகளுக்குப் பழமும் பட்சணமும் வாங்கித் தரக்கூடிய 'பணம்' எப்படிச் சேர முடியும்? கூலி நெல், பாதி வயிற்றை நிரப்பவே உதவும்-குப்பியின் 'பாடு' குடும்பத்தின் பசியைப் போக்கக் கொஞ்சம் உதவும். இப்படிப் பிழைப்பு! பலனில் மிகப்பெரும் பகுதியோ, பண்ணைக்குச் சேர்ந்துவிடுகிறது. இந்தச் 'செவ்வாழை' ஒன்றுதான் அவன் சொந்தமாக மொத்தமாக பலன் பெறுவதற்கு உதவக்கூடிய, உழைப்பு! இதிலே பங்கு பெற, பண்ணையார் குறுக்கிட முடியாதல்லவா? அவருக்காகப் பாடுபட்ட நேரம் போக, மிச்சமிருப்பதிலே, அலுத்துப் படுக்க வேண்டிய நேரத்திலே பாடுபட்டு, கண்ணைப் போல வளர்த்துவரும், செவ்வாழை! இதன் முழுப் பயனும் தன் குடும்பத்துக்கு! இது ஒன்றிலாவது தான் பட்டபாட்டுக்கு உரிய பலனைத் தானே பெற முடிகிறதே என்ற சந் தோஷம் செங்கோடனுக்கு.

இவ்வளவும் அவன் மனதிலே, தெளிவாகத் தோன்றிய கருத்துக்கள் அல்ல, புகைப்படலம் போல், அந்த எண்ணம் தோன்றும், மறையும்-செவ்வாழையைப் பார்க்கும்போது பூரிப்புடன் பெருமையும் அவன் அடைந்ததற்குக் காரணம் இந்த எண்ணந்தான்.

கன்று வளர்ந்தது கள்ளங் கபடமின்றி. செங்கோட னுக்குக் களிப்பும் வளர்ந்தது. செங்கோடனின் குழந்தைகளுக்கு இப்போது, விளையாட்டு இடமே, செவ்வாழை இருந்த இடந்தான்! மலரிடம் மங்கையருக்கும், தேனிடம் வண்டுகளுக்கும் ஏற்படும் பிரேமைபோல், அந்தக் குழந்தைகளுக்குச் செவ்வாழையிடம் பாசம் ஏற்பட்டுவிட்டது .

''இன்னும் ஒரு மாசத்திலே குலை தள்ளுமாப்பா?' கரியன் கேட்பான், ஆவலுடன், செங்கோடனை'.

''இரண்டு மாசமாகும்டா கண்ணு'' என்று செங்கோடன் பதிலளிப்பான்.

செவ்வாழை குலை தள்ளிற்று -- செங்கோடனின நடையிலேயே ஒரு புது முறுக்கு ஏற்பட்டுவிட்டது. நிமிர்த்து பார்ப்பான், குலையை, பெருமையுடன்.

பண்ணை பரந்தாம முதலியார், தமது மருமகப் பெண் முத்து விஜயாவின் பொன்னிற மேனியை அழகுபடுத்திய வைர மாலையைக்கூட அவ்வளவு பெருமையுடன் பார்த்திருக்கமாட்டார்! செங்கோடனின் கண்களுக்கு, அந்தச் செவ்வாழைக் குலை, முத்துவிஜயாவின வைரமாலையைவிட விலைமதிப்புள்ளதாகத்தான் தோன்றிற்று. குலை முற்ற முற்ற, செங்கோடனின குழந்தைகளின் ஆவலும், சச்சரவும், பங்குத் தகராறும், அப்பாவிடமோ அம்மாவிடமோ 'அப்பீல்' செய்வதும் ஓங்கி வளரலாயிற்று. ''எப்போது பழமாகும்?'' என்று கேட்பாள் பெண். 'எத்தனை நாளைக்கு மரததிலேயே இருப்பது?' என்று கேட்பான் பையன். செங்கோடன்  பக்குவமறிந்து குலையை வெட்டி, பதமாகப் பழுக்க வைத்துப் பிள்ளைகளுக்குத் தர வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தான். உழைப்பின் விளைவு! முழுப் பலனை நாம் பெறப் போகிறோம்---இடையே தரகர் இல்லை-முக்காலே மூன்று வீசம் பாகத்தைப் பறித்துக் கொள்ளும் முதலாளி இல்லை . உழைப்பு நம்முடையது என்றாலும் உடைமை பண்ணையாருடையது---அவர் எடுத்துக் கொண்டது போக மீதம்தானே தனக்கு என்று, வயலில் விளையும் செந்நெல்லைப் பற்றி எண்ண வேண்டும்---அதுதானே முறை! ஆனால் இந்தச் செவ்வாழை அப்படி அல்ல! உழைப்பும் உடைமையும் செங்கோடனுக்கே சொந்தம்.

இரண்டு நாளையில், குலையை வெட்டிவிடத் தீர்மானித்தான்--- பிள்ளைகள் துள்ளின சந்தோஷத்தால், மற்ற உழவர் வீட்டுப் பிள்ளைகளிடம் 'சேதி' பறந்தது---பழம் தரவேண்டும் என்று சொல்லி, அவலோ, கடலையோ, கிழங்கோ, மாம்பிஞ்சோ, எதை எதையோ, 'அச்சாரம்' கொடுத்தனர் பல குழந்தைகள், கரியனிடம்.

பாடுபட்டோம், பலனைப் பெறப் போகிறோம், இதிலே ஏற்படுகிற மகிழ்ச்சிக்கு ஈடு எதுவும் இல்லை . இதைப் போலவே, வயலிலும் நாம் பாடுபடுவது நமக்கு முழுப்பயன் அளிப்பதாக இருந்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும்! செவ்வாழைக்காக நாம் செலவிட்ட உழைப்பு, பண்ணையாரின் நிலத்துக்காகச் செலவிட்ட உழைப்பிலே, நூற்றுக்கு ஒரு பாகம்கூட இராது---ஆனால் உழைப்பு நம்முடைய தாகவும் வயல் அவருடைய உடைமையாகவும் இருந்ததால் பலனை அவர் அனுபவிக்கிறார் பெரும் பகுதி. இதோ, இந்தச் செவ்வாழை நம்ம கொல்லையிலே நாம் உழைத்து வளர்த்தது---எனவே பலன் நமக்குக் கிடைக்கிறது---இதுபோல, நாம் உழைத்துப் பிழைக்க நம்முடையது என்று ஒரு துண்டு வயல் இருந்தால், எவ்வளவு இன்பமாக இருக்கும். அப்படி ஒரு காலம் வருமா! உழைப்பவனுக்குத்தான் நிலம் சொந்தம். பாடுபடாதவன் பண்ணையாராக இருக்கக் கூடாது என்று சொல்லும் காலம் எப்போதாவது வருமா என்றெல்லாம் கூட, இலேசாகச் செங்கோடன் எண்ணத் தொடங்கினான். செவ்வாழை இது போன்ற சித்தாந்தங்களைக் கிளறிவிட்டது அவன் மனதில், குழந்தைகளுக்கோ நாக்கிலே நீர் ஊறலாயிற்று .

செங்கோடன் செவ்வாழைக் குலையைக் கண்டு களித்திருந்த சமயம், பண்ணை பரந்தாமர், தமது மருமகப் பெண் முத்து விஜயத்தின் பிறந்தநாள் விழாவை விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். அம்பிகை கோயிலில் அபிஷேக ஆராதனை செய்வதற்காக, 'ஐயரிடம்' சொல்லிவிட்டார். கணக்கப் பிள்ளையைக் கூப்பிட்டு, 'பட்டி,' தயாரிக்கச் சொன்னார். பல பண்டங்களைப் பற்றிக் குறிப்பு எழுதும்போது, 'பழம்' தேவை என்று தோன்றாமலிருக்குமா? 'இரண்டு சீப்பு வாழைப்பழம்' என்றார் பண்ணையார்.

"ஏனுங்க பழம்-கடையிலே நல்ல பழமே இல்லை---பச்சை நாடாத்தான் இருக்கு" என்று இழுத்தான் சுந்தரம், கணக்கப்பிள்ளை.

''சரிடா, அதிலேதான் இரண்டு சீப்பு வாங்கேன்?-- வேறே நல்ல பழமா எங்கே இருக்கு!'' என்று பண்ணையார் சொல்லி முடிப்பதற்குள், சுந்தரம், ''நம்ம செங்கோடன் கொல்லையிலே, தரமா, ஒரு செவ்வாழைக் குலை இருக்குதுங்க அதைக் கொண்டுகிட்டு வரலாம்'' என்றான் . 'சரி' என்றார் பண்ணையார்.

செங்கோடனின் செவ்வாழைக்குலை! அவனுடைய இன்பக் கனவு!! உழைப்பின் விளைவு!! குழந்தைகளின் குதூகலம்!!
அதற்கு மரண ஓலை தயாரித்துவிட்டான் சுந்தரம்!

எத்தனையோ பகல் பார்த்துப் பார்த்து, செங்கோடனின் குடும்பம் பூராவும் பூரித்தது அந்தக் குலையை! அதற்குக் கொலைகாரனானான் சுந்தரம். மகிழ்ச்சி, பெருமை, நம் பிக்கை இவைகளைத் தந்து வந்த, அந்தச் செவ்வாழைக் குலைக்கு வந்தது ஆபத்து.

தெருவிலே, சுந்தரமும் செங்கோடனும் பேசும்போது குழந்தைகள், செவ்வாழையைப் பற்றியதாக இருக்கும் என்று எண்ணவே இல்லை! செங்கோடனுக்குத் தலை கிறுகிறுவென்று சுற்றிற்று-நாக்குக் குழறிற்று---வார்த்தைகள் குபுகுபுவென்று கிளம்பி, தொண்டையில் சிக்கிக் கொண்டன.

மாட்டுப் பெண்ணுக்கு பிறந்த நாள் பூஜை---என்று காரணம் காட்டினான் சுந்தரம். என்ன செய்வான் செங்கோடன்! என்ன சொல்வான்? அவன் உள்ளத்திலே, வாழையோடு சேர்ந்து வளர்ந்த ஆசை---அவன் குழந்தைகளின் நாக்கில் நீர் ஊறச் செய்த ஆசை---இன்று, நாளை, என்று நாள் பார்த்துக் கொண்டிருந்த ஆவல்---எனும் எதைத்தான் சொல்ல முடியும்? கேட்பவர் பண்ணை பரந்தாமர்! எவ்வளவு அல்பனடா, வாழைக் குலையை அவர் வாய் திறந்து, உன்னை ஒரு பொருட்டாக மதித்துக் கேட்டனுப்பினால் முடியாது என்று சொல்லிவிட்டாயே! அவருடைய உப்பைத் தின்று பிழைக்கிறவனுக்கு, இவ்வளவு நன்றி கெட்டதனமா? கேவலம், ஒரு வாழைக் குலை! அவருடைய அந்தஸ்துக்கு, இது ஒரு பிரமாதமா!-என்று ஊர் ஏசுகிறது போல், அவன் கண்களுக்குத் தெரிகிறது.

'அப்பா! ஆசை காட்டி மோசம் செய்யாதே! நான் கூடத்தான் தண்ணீர் பாய்ச்சினேன்-மாடு மிதித்துவிடாத படி பாதுகாத்தேன்-செவ்வாழை ரொம்ப ருசியாக இருக்கும். கல்கண்டுபோல இருக்கும் என்று நீதானே என்னிடம் சொன்னாய், அப்பா! தங்கச்சிக்குக்கூட, 'உசிர்' அந்தப் பழத்திடம். மரத்தை அண்ணாந்து பார்க்கும்போதே, நாக்கிலே நீர் ஊறும். எங்களுக்குத் தருவதாகச் சொல்லிவிட்டு, இப்பொழுது ஏமாற்றுகிறாயே.  நாங்கள் என்னப்பா, உன்னை கடையிலே காசு போட்டுத் திராட்சை, கமலாவா வாங்கித் தரச் சொன்னோம். நம்ம கொல்லையிலே நாம் வளர்த்த தல்லவா!' என்று அழுகுரலுடன் கேட்கும் குழந்தைகளும், 'குழந்தைகளைத் தவிக்கச் செய்கிறாயே, நியாயமா?' என்று  கோபத்துடன் கேட்கும் மனைவியும், அவன் மனக் கண்களுக் குத் தெரிந்தனர்! எதிரே நின்றவரோ, பண்ணைக் கணக்கப்பிள்ளை ! அரிவாள் இருக்குமிடம் சென்றான், 'அப்பா, குலையை வெட்டப் போறாரு---செவ்வாழைக்குலை' என்று ஆனந்தக் கூச்சலிட்டுக் கொண்டு, குழந்தைகள் கூத்தாடின. செங்கோடனின் கண்களிலே நீர்த்துளிகள் கிளம்பின!  குலையை வெட்டினான்---உள்ளே கொண்டு வந்தான்---அரிவாளைக் கீழே போட்டான்---'குலையைக் கீழேவை அப்பா, தொட்டுப் பார்க்கலாம்' என்று குதித்தன குழந்தைகள், கரியனின் முதுகைத் தடவினான் செங்கோடன், ''கண்ணு! இந்தக் குலை,  நம்ம ஆண்டைக்கு வேணுமாம் கொண்டு போகிறேன்.  அழாதிங்க---இன்னும் ஒரு மாசத்திலே, பக்கத்துக் கண்ணு மரமாகிக் குலை தள்ளும். அது உங்களுக்குக் கட்டாயமாகக் கொடுத்து விடறேன்'' என்று கூறிக்கொண்டே, வீட்டை விட்டுக் கிளம்பினான், குழந்தையின் அழுகுரல், மனதைப் பிளப்பதற்குள்.

செங்கோடன் குடிசை அன்று பிணம் விழுந்த இடம் போலாயிற்று.  இரவு நெடுநேரத்திற்குப் பிறகுதான் செங்கோடனுக்குத் துணிவு பிறந்தது வீட்டுக்குவர! அழுது அலுத் துத் தூங்கிவிட்ட குழந்தைகளைப் பார்த்தான். அவன் கண்களிலே, குபுகுபுவெனக் கண்ணீர் கிளம்பிற்று. துடைத்துக் கொண்டு, படுத்துப் புரண்டான்-அவன் மனதிலே ஆயிரம் எண்ணங்கள், செவ்வாழையை, செல்லப் பிள்ளைபோல் வளர்த்து என்ன பலன்...!

அவருக்கு அது ஒரு பிரமாதமல்ல---ஆயிரம் குலைகளையும் அவர் நினைத்த மாத்திரத்தில் வாங்க முடியும்! ஆனால் செங்கோடனுக்கு...? அந்த ஒரு குலையைக் காண அவன் எவ்வளவு பாடுபட்டான்---எத்தனை இரவு அதைப் பற்றி இன்பமான கனவுகள்--- எத்தனை ஆயிரம் தடவை, குழந்தைகளுக்கு ஆசை காட்டியிருப்பான்! உழைப்பு எவ்வளவு! அக்கரை எத்துணை! எல்லாம் ஒரு நொடியில் அழிந்தன!

நாலு நாட்களுக்குப் பிறகு, வெள்ளித் தட்டிலே, ஒரு சீப்பு செவ்வாழைப் பழத்தை வைத்துக் கொண்டு, அன்ன நடை நடந்து அழகுமுத்து விஜயா, அம்பிகை ஆலயத்துக்குச் சென்றாள்.

நாலு நாட்கள் சமாதானம் சொல்லியும், குழந்தை களின் குமுறல் ஓயவில்லை . கரியன் ஓரே பிடிவாதம் செய்தான், ஒரு பழம் வேண்டுமென்று. குப்பி, பழங்கலத்திலிருந்து ஒரு காலணாவை எடுத்துக் கொடுத்தனுப்பினாள், பழம் வாங்கிக்கொள்ளச் சொல்லி. பறந்தோடினான் கரியன்.

கடையிலே செவ்வாழைச் சீப்பு, அழகாகத் தொங்கிக் கொண்டிருந்தது. கணக்கப்பிள்ளை, பண்ணை வீட்டிலே இருந்து நாலு சீப்பை முதலிலேயே தீர்த்துவிட்டான்---அவன் விற்றான் கடைக்காரனுக்கு---அதன் எதிரே  ஏக்கத் துடன் நின்றான் கரியன்! ''பழம், ஒரு அணாடா, பயலே--- காலணாவுக்குச் செவ்வாழை கிடைக்குமா --- போடா?'' என்று விரட்டினான், கடைக்காரன். கரியன் அறிவானா, பாபம், தன் கொல்லையிலே இருந்த செவ்வாழை, இப்போது கடையில் கொலுவீற்றிருக்கிறது என்ற விந்தையை! பாபம்! எத்தனையோ நாள், அந்தச் சிறுவன், தண்ணீர் பாய்ச்சினான், பழம் கிடைக்குமென்று! பழம் இருக்கிறது; கரியனுக்கு எட்டாத இடத்தில்! விசாரத்தோடு வீட்டிற்கு வந்தான்', வறுத்த கடலையை வாங்கிக் கொரித்துக் கொண்டே. செங்கோடன், கொல்லைப் புறத்திலிருந்து வெளியே வந்தான், வாழை மரத்துண்டுடன்.

"ஏம்பா! இதுவும் பண்ணை வீட்டுக்கா?'' என்று கேட்டான் கரியன்.

''இல்லேடா, கண்ணு! நம்ம பார்வதி பாட்டி செத்துப் போயிட்டா, அந்தப் பாடையிலே கட்ட'' என்றான் செங்கோடன்.

அலங்காரப் பாடையிலே, செவ்வாழையின் துண்டு! பாடையைச் சுற்றி அழுகுரல்! கரியனும், மற்றக் குழந்தைகளும், பின்பக்கம்.

கரியன் பெருமையாகப் பாடையைக் காட்டிச் சொன்னான். ''எங்க வீட்டுச் செவ்வாழைடா,'' என்று.

“எங்க கொல்லையிலே இருந்த செவ்வாழைக்குலை யைப் பண்ணை வீட்டுக்குக் கொடுத்து விட்டோம்---மரத்தை வெட்டி   பாடையிலே கட்டிவிட்டோம்'' என்றான் கரியன்.

பாபம், சிறுவன்தானே!! அவன் என்ன கண்டான், செங்கோடனின் செவ்வாழை, தொழிலாளர் உலகிலே சர்வ சாதாரணச் சம்பவம் என்பதை.

Tags
Tamil short stories
Fictional story
Tamil 
Anna stories
Tamil history
Tamil entertainment
Ethical story 
2024