செவ்வாழை சிறுகதை
அறிஞர் அண்ணா
செங்கோடன், அந்தச் செவ்வாழைக் கன்றைத் தன் செல்லப் பிள்ளைபோல் வளர்த்து வந்தான். இருட்டுகிற நேரம் வீடு திரும்பினாலும்கூட, வயலிலே அவன்பட்ட கஷ்டத்தைக்கூடப் பொருட்படுத்தாமல், கொல்லைப்புறம் சென்று, செவ்வாழைக் கன்றைப் பார்த்துவிட்டு, தண்ணீர் போதுமானபடி பாய்ச்சப்பட்டிருக்கிறதா என்று கவனித்து விட்டுத்தான், தன் நான்கு குழந்தைகளிடமும் பேசுவான். அவ்வளவு பிரேமையுடன் அந்தச் செவ்வாழையை அவன் வளர்த்து வந்தான். கன்று வளர வளர அவன் களிப்பும் வளர்ந்தது. செவ்வாழைக்கு நீர் பாய்ச்சும் போதும், கல் மண்ணைக் கிளறிவிடும்போதும், அவன் கண்கள் பூரிப்படையும் மகிழ்ச்சியால், கரியனிடம் -அவனுடைய முதல் பையன், காட்டியதைவிட அதிகமான அன்பும், அக்கரையும் காட்டு கிறாரே என்று ஆச்சரியம், சற்றுப் பொறாமைகூட ஏற்பட்டது, குப்பிக்கு.
''குப்பி! ஏதாச்சும் மாடுகீடு வந்து வாழையை மிதிச்சிடப் போகுது, ஜாக்ரதையாக் கவனிச்சுக்கோ. அருமையான கன்று-ஆமாம், செவ்வாழைன்னா சாமான்யமில்லே. குலை, எம்மாம் பெரிசா இருக்கும் தெரியுமோ? பழம், வீச்சு வீச்சாகவும் இருக்கும். உருண்டையாகவும் இருக்கும்--- ரொம்ப ருசி--- பழத்தைக் கண்ணாலே பார்த்தாக்கூடப் போதும்; பசியாறிப் போகும்'' என்று குப்பியிடம் பெருமை யாகப் பேசுவான் செங்கோடன்.
அப்பா சொல்லுவதை நாலு பிள்ளைகளும் ஆமோதிப் பார்கள்--- அதுமட்டுமா-பக்கத்துக் குடிசை, எதிர்க் குடிசைகளிலே உள்ள குழந்தைகளிடமெல்லாம், இதே பெருமை யைத்தான் பேசிக் கொள்வார்கள். உழவர் வீட்டுப் பிள்ளைகள், வேறே எதைப் பற்றிப் பேசிக் கொள்ள முடியும். அப்பா வாங்கிய புதிய மோட்டாரைப் பற்றியா, அம்மாவின் வைரத்தோடு பற்றியா, அண்ணன் வாங்கிவந்த ரேடியோவைப் பற்றியா, எதைப் பற்றிப் பேசமுடியும்? செவ்வாழைக் கன்றுதான், அவர்களுக்கு, மோட்டார், ரேடியோ, வைர மாலை, சகலமும்!
மூத்த பயல் கரியன்', 'செவ்வாழைக் குலை தள்ளியதும், ஒரு சீப்புப் பழம் எனக்குத்தான்' என்று சொல்லுவான்".
''ஒண்ணுக்கூட எனக்குத் தர மாட்டாயாடா-நான் உனக்கு மாம்பழம் தந்திருக்கிறேன்? கவனமிருக்கட்டும். வறுத்த வேர்க்கடலை கொடுத்திருக்கிறேன்; கவனமிருக்கட் டும்" --என்று எதிர்க் குடிசை எல்லப்பன் கூறுவான்...
கரியனின் தங்கை, காமாட்சியோ, கண்ணைச் சிமிட்டிக் கொண்டே ''உனக்கு ஒரு சீப்புன்னா, எனக்கு இரண்டு தெரியுமா? அம்மாவைக் கேட்டு ஒரு சீப்பு, அப்பாவைக் கேட்டு ஒரு சீப்பு'' என்று குறும்பாகப் பேசுவாள்.
மூன்றாவது பையன் முத்து, ''சீப்புக் கணக்குப் போட்டுக்கிட்டு ஏமாந்து போகாதிங்க. ஆமா-பழமாவதற்குள்ளே யாரார் என்னென்ன செய்துவிடுவாங்களோ, யாரு கண்டாங்க'' என்று சொல்லுவான்-வெறும் வேடிக்கைக் காக அல்ல--திருடியாவது மற்றவர்களைவிட அதிகப்படியான பழங்களைத் தின்றே தீர்த்து விடுவது என்று தீர்மானித்தே விட்டான்.
செங்கோடனின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வந்தது செவ்வாழை, உழைப்பு அதிகம் வயலில். பண்ணை மானேஜரின் ஆர்ப்பாட்டம் அதிகம். இவ்வளவையும் சகித்துக் கொள்வான்- செவ்வாழையைக் கண்டதும் சகலமும் மறந்து போகும். குழந்தைகள் அழுதால், செவ்வாழையைக் காட்டித்தான் சமாதானப்படுத்துவான்! துஷ்டத்தனம் செய்கிற குழந்தையை மிரட்டவும், செவ்வாழையைத்தான் கவனப்படுத்துவான்! குழந்தைகள் பிரியமாகச் சாப்பிடுவார்கள், செவ்வாழையை என்ற எண்ணம் செங்கோடனுக்கு. பண்ணை வீட்டுப் பிள்ளைகள் ஆப்பிள், திராட்சை தின்ன முடிகிறது--கரியனும் முத்துவும், எப்படி விலை உயர்ந்த அந்தப் பழங்களைப் பெற முடியும்? செவ்வாழையைத் தந்து தன் குழந்தைகளைக் குதூகலிக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணந்தான், செங்கோடனை, அந்தச் செவ்வாழைக் கன்றைச் செல்லமாக வளர்க்கும்படிச் செய்தது. உழவன் செங்கோடனிடம், எவ்வளவு பாடு பட்டாலும், குழந்தைகளுக்குப் பழமும் பட்சணமும் வாங்கித் தரக்கூடிய 'பணம்' எப்படிச் சேர முடியும்? கூலி நெல், பாதி வயிற்றை நிரப்பவே உதவும்-குப்பியின் 'பாடு' குடும்பத்தின் பசியைப் போக்கக் கொஞ்சம் உதவும். இப்படிப் பிழைப்பு! பலனில் மிகப்பெரும் பகுதியோ, பண்ணைக்குச் சேர்ந்துவிடுகிறது. இந்தச் 'செவ்வாழை' ஒன்றுதான் அவன் சொந்தமாக மொத்தமாக பலன் பெறுவதற்கு உதவக்கூடிய, உழைப்பு! இதிலே பங்கு பெற, பண்ணையார் குறுக்கிட முடியாதல்லவா? அவருக்காகப் பாடுபட்ட நேரம் போக, மிச்சமிருப்பதிலே, அலுத்துப் படுக்க வேண்டிய நேரத்திலே பாடுபட்டு, கண்ணைப் போல வளர்த்துவரும், செவ்வாழை! இதன் முழுப் பயனும் தன் குடும்பத்துக்கு! இது ஒன்றிலாவது தான் பட்டபாட்டுக்கு உரிய பலனைத் தானே பெற முடிகிறதே என்ற சந் தோஷம் செங்கோடனுக்கு.
இவ்வளவும் அவன் மனதிலே, தெளிவாகத் தோன்றிய கருத்துக்கள் அல்ல, புகைப்படலம் போல், அந்த எண்ணம் தோன்றும், மறையும்-செவ்வாழையைப் பார்க்கும்போது பூரிப்புடன் பெருமையும் அவன் அடைந்ததற்குக் காரணம் இந்த எண்ணந்தான்.
கன்று வளர்ந்தது கள்ளங் கபடமின்றி. செங்கோட னுக்குக் களிப்பும் வளர்ந்தது. செங்கோடனின் குழந்தைகளுக்கு இப்போது, விளையாட்டு இடமே, செவ்வாழை இருந்த இடந்தான்! மலரிடம் மங்கையருக்கும், தேனிடம் வண்டுகளுக்கும் ஏற்படும் பிரேமைபோல், அந்தக் குழந்தைகளுக்குச் செவ்வாழையிடம் பாசம் ஏற்பட்டுவிட்டது .
''இன்னும் ஒரு மாசத்திலே குலை தள்ளுமாப்பா?' கரியன் கேட்பான், ஆவலுடன், செங்கோடனை'.
''இரண்டு மாசமாகும்டா கண்ணு'' என்று செங்கோடன் பதிலளிப்பான்.
செவ்வாழை குலை தள்ளிற்று -- செங்கோடனின நடையிலேயே ஒரு புது முறுக்கு ஏற்பட்டுவிட்டது. நிமிர்த்து பார்ப்பான், குலையை, பெருமையுடன்.
பண்ணை பரந்தாம முதலியார், தமது மருமகப் பெண் முத்து விஜயாவின் பொன்னிற மேனியை அழகுபடுத்திய வைர மாலையைக்கூட அவ்வளவு பெருமையுடன் பார்த்திருக்கமாட்டார்! செங்கோடனின் கண்களுக்கு, அந்தச் செவ்வாழைக் குலை, முத்துவிஜயாவின வைரமாலையைவிட விலைமதிப்புள்ளதாகத்தான் தோன்றிற்று. குலை முற்ற முற்ற, செங்கோடனின குழந்தைகளின் ஆவலும், சச்சரவும், பங்குத் தகராறும், அப்பாவிடமோ அம்மாவிடமோ 'அப்பீல்' செய்வதும் ஓங்கி வளரலாயிற்று. ''எப்போது பழமாகும்?'' என்று கேட்பாள் பெண். 'எத்தனை நாளைக்கு மரததிலேயே இருப்பது?' என்று கேட்பான் பையன். செங்கோடன் பக்குவமறிந்து குலையை வெட்டி, பதமாகப் பழுக்க வைத்துப் பிள்ளைகளுக்குத் தர வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தான். உழைப்பின் விளைவு! முழுப் பலனை நாம் பெறப் போகிறோம்---இடையே தரகர் இல்லை-முக்காலே மூன்று வீசம் பாகத்தைப் பறித்துக் கொள்ளும் முதலாளி இல்லை . உழைப்பு நம்முடையது என்றாலும் உடைமை பண்ணையாருடையது---அவர் எடுத்துக் கொண்டது போக மீதம்தானே தனக்கு என்று, வயலில் விளையும் செந்நெல்லைப் பற்றி எண்ண வேண்டும்---அதுதானே முறை! ஆனால் இந்தச் செவ்வாழை அப்படி அல்ல! உழைப்பும் உடைமையும் செங்கோடனுக்கே சொந்தம்.
இரண்டு நாளையில், குலையை வெட்டிவிடத் தீர்மானித்தான்--- பிள்ளைகள் துள்ளின சந்தோஷத்தால், மற்ற உழவர் வீட்டுப் பிள்ளைகளிடம் 'சேதி' பறந்தது---பழம் தரவேண்டும் என்று சொல்லி, அவலோ, கடலையோ, கிழங்கோ, மாம்பிஞ்சோ, எதை எதையோ, 'அச்சாரம்' கொடுத்தனர் பல குழந்தைகள், கரியனிடம்.
பாடுபட்டோம், பலனைப் பெறப் போகிறோம், இதிலே ஏற்படுகிற மகிழ்ச்சிக்கு ஈடு எதுவும் இல்லை . இதைப் போலவே, வயலிலும் நாம் பாடுபடுவது நமக்கு முழுப்பயன் அளிப்பதாக இருந்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும்! செவ்வாழைக்காக நாம் செலவிட்ட உழைப்பு, பண்ணையாரின் நிலத்துக்காகச் செலவிட்ட உழைப்பிலே, நூற்றுக்கு ஒரு பாகம்கூட இராது---ஆனால் உழைப்பு நம்முடைய தாகவும் வயல் அவருடைய உடைமையாகவும் இருந்ததால் பலனை அவர் அனுபவிக்கிறார் பெரும் பகுதி. இதோ, இந்தச் செவ்வாழை நம்ம கொல்லையிலே நாம் உழைத்து வளர்த்தது---எனவே பலன் நமக்குக் கிடைக்கிறது---இதுபோல, நாம் உழைத்துப் பிழைக்க நம்முடையது என்று ஒரு துண்டு வயல் இருந்தால், எவ்வளவு இன்பமாக இருக்கும். அப்படி ஒரு காலம் வருமா! உழைப்பவனுக்குத்தான் நிலம் சொந்தம். பாடுபடாதவன் பண்ணையாராக இருக்கக் கூடாது என்று சொல்லும் காலம் எப்போதாவது வருமா என்றெல்லாம் கூட, இலேசாகச் செங்கோடன் எண்ணத் தொடங்கினான். செவ்வாழை இது போன்ற சித்தாந்தங்களைக் கிளறிவிட்டது அவன் மனதில், குழந்தைகளுக்கோ நாக்கிலே நீர் ஊறலாயிற்று .
செங்கோடன் செவ்வாழைக் குலையைக் கண்டு களித்திருந்த சமயம், பண்ணை பரந்தாமர், தமது மருமகப் பெண் முத்து விஜயத்தின் பிறந்தநாள் விழாவை விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். அம்பிகை கோயிலில் அபிஷேக ஆராதனை செய்வதற்காக, 'ஐயரிடம்' சொல்லிவிட்டார். கணக்கப் பிள்ளையைக் கூப்பிட்டு, 'பட்டி,' தயாரிக்கச் சொன்னார். பல பண்டங்களைப் பற்றிக் குறிப்பு எழுதும்போது, 'பழம்' தேவை என்று தோன்றாமலிருக்குமா? 'இரண்டு சீப்பு வாழைப்பழம்' என்றார் பண்ணையார்.
"ஏனுங்க பழம்-கடையிலே நல்ல பழமே இல்லை---பச்சை நாடாத்தான் இருக்கு" என்று இழுத்தான் சுந்தரம், கணக்கப்பிள்ளை.
''சரிடா, அதிலேதான் இரண்டு சீப்பு வாங்கேன்?-- வேறே நல்ல பழமா எங்கே இருக்கு!'' என்று பண்ணையார் சொல்லி முடிப்பதற்குள், சுந்தரம், ''நம்ம செங்கோடன் கொல்லையிலே, தரமா, ஒரு செவ்வாழைக் குலை இருக்குதுங்க அதைக் கொண்டுகிட்டு வரலாம்'' என்றான் . 'சரி' என்றார் பண்ணையார்.
செங்கோடனின் செவ்வாழைக்குலை! அவனுடைய இன்பக் கனவு!! உழைப்பின் விளைவு!! குழந்தைகளின் குதூகலம்!!
அதற்கு மரண ஓலை தயாரித்துவிட்டான் சுந்தரம்!
எத்தனையோ பகல் பார்த்துப் பார்த்து, செங்கோடனின் குடும்பம் பூராவும் பூரித்தது அந்தக் குலையை! அதற்குக் கொலைகாரனானான் சுந்தரம். மகிழ்ச்சி, பெருமை, நம் பிக்கை இவைகளைத் தந்து வந்த, அந்தச் செவ்வாழைக் குலைக்கு வந்தது ஆபத்து.
தெருவிலே, சுந்தரமும் செங்கோடனும் பேசும்போது குழந்தைகள், செவ்வாழையைப் பற்றியதாக இருக்கும் என்று எண்ணவே இல்லை! செங்கோடனுக்குத் தலை கிறுகிறுவென்று சுற்றிற்று-நாக்குக் குழறிற்று---வார்த்தைகள் குபுகுபுவென்று கிளம்பி, தொண்டையில் சிக்கிக் கொண்டன.
மாட்டுப் பெண்ணுக்கு பிறந்த நாள் பூஜை---என்று காரணம் காட்டினான் சுந்தரம். என்ன செய்வான் செங்கோடன்! என்ன சொல்வான்? அவன் உள்ளத்திலே, வாழையோடு சேர்ந்து வளர்ந்த ஆசை---அவன் குழந்தைகளின் நாக்கில் நீர் ஊறச் செய்த ஆசை---இன்று, நாளை, என்று நாள் பார்த்துக் கொண்டிருந்த ஆவல்---எனும் எதைத்தான் சொல்ல முடியும்? கேட்பவர் பண்ணை பரந்தாமர்! எவ்வளவு அல்பனடா, வாழைக் குலையை அவர் வாய் திறந்து, உன்னை ஒரு பொருட்டாக மதித்துக் கேட்டனுப்பினால் முடியாது என்று சொல்லிவிட்டாயே! அவருடைய உப்பைத் தின்று பிழைக்கிறவனுக்கு, இவ்வளவு நன்றி கெட்டதனமா? கேவலம், ஒரு வாழைக் குலை! அவருடைய அந்தஸ்துக்கு, இது ஒரு பிரமாதமா!-என்று ஊர் ஏசுகிறது போல், அவன் கண்களுக்குத் தெரிகிறது.
'அப்பா! ஆசை காட்டி மோசம் செய்யாதே! நான் கூடத்தான் தண்ணீர் பாய்ச்சினேன்-மாடு மிதித்துவிடாத படி பாதுகாத்தேன்-செவ்வாழை ரொம்ப ருசியாக இருக்கும். கல்கண்டுபோல இருக்கும் என்று நீதானே என்னிடம் சொன்னாய், அப்பா! தங்கச்சிக்குக்கூட, 'உசிர்' அந்தப் பழத்திடம். மரத்தை அண்ணாந்து பார்க்கும்போதே, நாக்கிலே நீர் ஊறும். எங்களுக்குத் தருவதாகச் சொல்லிவிட்டு, இப்பொழுது ஏமாற்றுகிறாயே. நாங்கள் என்னப்பா, உன்னை கடையிலே காசு போட்டுத் திராட்சை, கமலாவா வாங்கித் தரச் சொன்னோம். நம்ம கொல்லையிலே நாம் வளர்த்த தல்லவா!' என்று அழுகுரலுடன் கேட்கும் குழந்தைகளும், 'குழந்தைகளைத் தவிக்கச் செய்கிறாயே, நியாயமா?' என்று கோபத்துடன் கேட்கும் மனைவியும், அவன் மனக் கண்களுக் குத் தெரிந்தனர்! எதிரே நின்றவரோ, பண்ணைக் கணக்கப்பிள்ளை ! அரிவாள் இருக்குமிடம் சென்றான், 'அப்பா, குலையை வெட்டப் போறாரு---செவ்வாழைக்குலை' என்று ஆனந்தக் கூச்சலிட்டுக் கொண்டு, குழந்தைகள் கூத்தாடின. செங்கோடனின் கண்களிலே நீர்த்துளிகள் கிளம்பின! குலையை வெட்டினான்---உள்ளே கொண்டு வந்தான்---அரிவாளைக் கீழே போட்டான்---'குலையைக் கீழேவை அப்பா, தொட்டுப் பார்க்கலாம்' என்று குதித்தன குழந்தைகள், கரியனின் முதுகைத் தடவினான் செங்கோடன், ''கண்ணு! இந்தக் குலை, நம்ம ஆண்டைக்கு வேணுமாம் கொண்டு போகிறேன். அழாதிங்க---இன்னும் ஒரு மாசத்திலே, பக்கத்துக் கண்ணு மரமாகிக் குலை தள்ளும். அது உங்களுக்குக் கட்டாயமாகக் கொடுத்து விடறேன்'' என்று கூறிக்கொண்டே, வீட்டை விட்டுக் கிளம்பினான், குழந்தையின் அழுகுரல், மனதைப் பிளப்பதற்குள்.
செங்கோடன் குடிசை அன்று பிணம் விழுந்த இடம் போலாயிற்று. இரவு நெடுநேரத்திற்குப் பிறகுதான் செங்கோடனுக்குத் துணிவு பிறந்தது வீட்டுக்குவர! அழுது அலுத் துத் தூங்கிவிட்ட குழந்தைகளைப் பார்த்தான். அவன் கண்களிலே, குபுகுபுவெனக் கண்ணீர் கிளம்பிற்று. துடைத்துக் கொண்டு, படுத்துப் புரண்டான்-அவன் மனதிலே ஆயிரம் எண்ணங்கள், செவ்வாழையை, செல்லப் பிள்ளைபோல் வளர்த்து என்ன பலன்...!
அவருக்கு அது ஒரு பிரமாதமல்ல---ஆயிரம் குலைகளையும் அவர் நினைத்த மாத்திரத்தில் வாங்க முடியும்! ஆனால் செங்கோடனுக்கு...? அந்த ஒரு குலையைக் காண அவன் எவ்வளவு பாடுபட்டான்---எத்தனை இரவு அதைப் பற்றி இன்பமான கனவுகள்--- எத்தனை ஆயிரம் தடவை, குழந்தைகளுக்கு ஆசை காட்டியிருப்பான்! உழைப்பு எவ்வளவு! அக்கரை எத்துணை! எல்லாம் ஒரு நொடியில் அழிந்தன!
நாலு நாட்களுக்குப் பிறகு, வெள்ளித் தட்டிலே, ஒரு சீப்பு செவ்வாழைப் பழத்தை வைத்துக் கொண்டு, அன்ன நடை நடந்து அழகுமுத்து விஜயா, அம்பிகை ஆலயத்துக்குச் சென்றாள்.
நாலு நாட்கள் சமாதானம் சொல்லியும், குழந்தை களின் குமுறல் ஓயவில்லை . கரியன் ஓரே பிடிவாதம் செய்தான், ஒரு பழம் வேண்டுமென்று. குப்பி, பழங்கலத்திலிருந்து ஒரு காலணாவை எடுத்துக் கொடுத்தனுப்பினாள், பழம் வாங்கிக்கொள்ளச் சொல்லி. பறந்தோடினான் கரியன்.
கடையிலே செவ்வாழைச் சீப்பு, அழகாகத் தொங்கிக் கொண்டிருந்தது. கணக்கப்பிள்ளை, பண்ணை வீட்டிலே இருந்து நாலு சீப்பை முதலிலேயே தீர்த்துவிட்டான்---அவன் விற்றான் கடைக்காரனுக்கு---அதன் எதிரே ஏக்கத் துடன் நின்றான் கரியன்! ''பழம், ஒரு அணாடா, பயலே--- காலணாவுக்குச் செவ்வாழை கிடைக்குமா --- போடா?'' என்று விரட்டினான், கடைக்காரன். கரியன் அறிவானா, பாபம், தன் கொல்லையிலே இருந்த செவ்வாழை, இப்போது கடையில் கொலுவீற்றிருக்கிறது என்ற விந்தையை! பாபம்! எத்தனையோ நாள், அந்தச் சிறுவன், தண்ணீர் பாய்ச்சினான், பழம் கிடைக்குமென்று! பழம் இருக்கிறது; கரியனுக்கு எட்டாத இடத்தில்! விசாரத்தோடு வீட்டிற்கு வந்தான்', வறுத்த கடலையை வாங்கிக் கொரித்துக் கொண்டே. செங்கோடன், கொல்லைப் புறத்திலிருந்து வெளியே வந்தான், வாழை மரத்துண்டுடன்.
"ஏம்பா! இதுவும் பண்ணை வீட்டுக்கா?'' என்று கேட்டான் கரியன்.
''இல்லேடா, கண்ணு! நம்ம பார்வதி பாட்டி செத்துப் போயிட்டா, அந்தப் பாடையிலே கட்ட'' என்றான் செங்கோடன்.
அலங்காரப் பாடையிலே, செவ்வாழையின் துண்டு! பாடையைச் சுற்றி அழுகுரல்! கரியனும், மற்றக் குழந்தைகளும், பின்பக்கம்.
கரியன் பெருமையாகப் பாடையைக் காட்டிச் சொன்னான். ''எங்க வீட்டுச் செவ்வாழைடா,'' என்று.
“எங்க கொல்லையிலே இருந்த செவ்வாழைக்குலை யைப் பண்ணை வீட்டுக்குக் கொடுத்து விட்டோம்---மரத்தை வெட்டி பாடையிலே கட்டிவிட்டோம்'' என்றான் கரியன்.
பாபம், சிறுவன்தானே!! அவன் என்ன கண்டான், செங்கோடனின் செவ்வாழை, தொழிலாளர் உலகிலே சர்வ சாதாரணச் சம்பவம் என்பதை.
அறிஞர் அண்ணா அவர்கள் ஏழைகளின் துயர் குறித்து எழுதிய சிறந்த ஒரு சிறுகதைதான் "செவ்வாழை "எனும் சிறுகதை.
இன்றைய வாசிப்பில் – அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்!
“இலக்கியம் என்னுடைய பிரச்சினையல்ல; வாழ்க்கைதான் என்னுடைய பிரச்சினை. வாழ்க்கையில் இன்பத்தைப் பெருக்க வேண்டும். வேதனையைக் குறைக்க வேண்டும். இதுதான் என் இறுதி லட்சியம். ஒரு தெளிவான சமூகக் குறிக்கோள் உள்ள எழுத்தாளன் நான். இந்தச் சமூக உறவுதான் என்னை எழுதவைக்கிறது.”
முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட நன்மைகளில் ஒன்று,சிறுகதை என்ற இலக்கிய வடிவம். நாவல் வடிவத்தைப் போலவே சிறுகதை வடிவமும், ஆங்கில இலக்கிய வாசிப்பின் வழியே பெறப்பட்டது. தமிழில் இவ்வடிவத்தின் முன்னோடியாக வ.வெ.சு.ஐயரைக் குறிப்பிடலாம். அடுத்து பி.எஸ்.இராமையா, கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, புதுமைப் பித்தன், சி.சு.செல்லப்பா, கா.சிவத்தம்பி, இளங்கோவன், சிதம்பர சுப்ரமணியன், பி.எம்.கண்ணன், மௌனி போன்றவர்கள் சிறுகதைகளை மட்டுமல்ல; பரிசோதனையிலான கதைகளையும் எழுதினார்கள். இவர்களுடைய வரிசையில் கு.அழகிரிசாமி, லா.ச.ராமா மிர்தம், தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி போன்றவர்களும் சிறுகதை வடிவத்தைத் தமிழில் வளப்படுத்தினார்கள்.
இந்த எழுத்தாளர்கள், சிறுகதை வடிவத்திற்கு, உள்ளடக்கத்திற்கு, மொழிக்கு, நடைக்கு, பரிசோதனைக்கு முன்னுரிமை தந்து எழுதியவர்கள். இவர்களுடைய கதைகளில் தனிமனித சிக்கல், புலம்பல், குழப்பம், குடும்ப உறவுகளுக்கிடையிலான மோதல்களே அதிகம் பேசுபொருளாக இருந்தன. ஒருவகையில் இவர்கள் ஆச்சாரத்தைக்கடைப்பிடித்து மிகவும் ஆச்சாரமான முறையில் எழுதியவர்கள் எனலாம். இவர்கள் எழுதிய அதே காலகட்டத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல்மாற்றங்களினால், சித்தாந்தங்களின் அடிப்படையில் இயக்கங்கள் உருவானதினால், இயக்கங்கள் உருவாக்கிய புதிய கொள்கைகளின் அடிப்படையில் பலருக்கு எழுதவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இந்தநிர்பந்தம் சமூகத்தில் நிலவிய மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிராக, பரம்பரைத் தொழில்களுக்கு எதிராகக் கருத்துப் பிரச்சாரம் செய்ய வேண்டிய, கிட்டத்தட்டகலகம் செய்யவேண்டிய சூழல் இருந்தது.
இந்தச் சூழல் பல எழுத்தாளர்களை, சிந்தனையாளர் களை, போராட்டக்காரர்களை உருவாக்கியது. இவர்களை காலம் உருவாக்கிய, சமூகம் உருவாக்கிய எழுத்தாளர்கள் என்று சொல்லலாம். இனம், மொழி பற்றுடன், பழமைக்கு எதிரான குணம், அறியாமை, மடமை, மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் பலர் எழுதவந்தனர். அப்படிவந்தவர்களில் முக்கியமான வராகவும், முதன்மையான வராகவும் பேரெழுச்சியை உருவாக்கியவராகவும் இருந்தவர் அண்ணா. இவருடைய எழுத்து தமிழகத்தில் ஒரு இயக்கமாக வளர்க்கப்பட்டது. ஒருவருடைய எழுத்தே இயக்கமாக உருவாவது, உருவானது என்பது தமிழகத்தில் மட்டுமே நிகழ்ந்த அதிசயம். அந்த எழுத்தின் இயக்கம் இன்றும் தொடர்கிறது. அண்ணாவினுடைய எழுத்து என்பது தமிழில் புதியவகை எழுத்து இயக்கத்தை மட்டுமல்ல; ஒரு அரசியல் இயக்கத்தையும் உருவாக்கியது. அந்த வரலாறு எளிதில் அழிக்கக்கூடிய வரலாறாக இல்லை என்பதும் உண்மை. அண்ணாவினுடைய எழுத்து தமிழ் மொழியில், தமிழ்ச்சமூக வாழ்வில் பெரியமாற்றத்தை உருவாக்கியது. அவருடைய எழுத்தின் தாக்கம் இன்றும் இருக்கிறது.
அண்ணாவுக்கு மேடைப் பேச்சாளர், அரசியல் தலைவர், நாடக ஆசிரியர் என்று பலமுகங்கள் உண்டு. மற்ற முகங்களைவிட சிறுகதை ஆசிரியர் என்ற முகம் மிகவும் முக்கியமானது. 1934 முதல் 1966 வரையிலான காலத்தில் அவர் மொத்தம் நூற்று பதிமூன்று சிறுகதைகளை எழுதியுள்ளார். 11.12.1934இல் வெளிவந்த ‘கொக்கரக்கோ’ என்பது அவருடையமுதல் சிறுகதை. 14.01. 1966இல் வெளிவந்த ‘பொங்கல்பரிசு’ என்பது அவருடைய கடைசி சிறுகதை. ‘கொக்கரக்கோ’ என்பதுதமிழ்ப் பண்பாட்டில், கலாச்சாரத்தில், நம்பிக்கையை மையப்படுத்துவது. ‘பொங்கல் பரிசு’ என்பது மகிழ்ச்சியை, ஆனந்தத்தை, கொண்டாட்டத்தை, நிறைவை மையப்படுத்துவது. அண்ணா தன்னுடைய சிறுகதை களை கொக்கரக்கோவில் ஆரம்பித்து பொங்கல் பரிசில் முடித்துள்ளார்.
இந்த ஒற்றுமை இயற்கையாக அமைந்த ஆச்சரியம், தமிழ்ச் சமூகத்தை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்பது அவருடைய நோக்கம். அந்த நோக்கத்திற்காகத்தான் அவர் எழுதினார். கறுப்பினப் போராளி மார்ட்டின் லூதர்கிங் ‘எனக்கொரு கனவு இருக்கிறது’ என்று சொன்னதுபோல ‘எனக்கொரு நோக்கம் இருக்கிறது, லட்சியம் இருக்கிறது’ என்று அண்ணா சொன்னார். அவருடைய நோக்கமும், கனவும் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வான முரண்பாட்டை ஒழிப்பது தொடர்பானது. வாழ்விற்கான உரிமையையும், அதற்கான வேட்கையையும் முன்னிறுத்துவதே அவருடைய நோக்கம், லட்சியம். தமிழ்ச் சமூகம் மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை இழந்ததற்கான காரணங்கள் என்ன, அவற்றை அடைவதற்கான வழிவகைகள் என்ன என்று ஆராய்வதுதான் அவருடைய சிறுகதைகளின் மையமான நோக்கம். ஒரு எழுத்தாளனுடைய நோக்கம்தான் அவன் எழுத்துக்கு வலிமையாக அமைகிறது.இந்த வலிமைதான் எழுத்தினுடைய மேன்மையாகவும், எழுத்தாளனுடைய மேன்மையாகவும் அமைகிறது. அரை நூற்றாண்டு காலம் முடிந்துவிட்ட பிறகும், அண்ணாவினுடைய சிறுகதைகளைப் பற்றி பேசுவதற்குக் காரணம் அக்கதைகளினுடைய வலிமையும், மேன்மையும்தான்.
ஒரு எழுத்தாளனுடைய மொத்த படைப்புகளையும் படித்து பிறகு யோசிக்கும்போது நம்முடைய நினைவில் பத்து, இருபது கதைகள் நினைவில் நின்றாலே பெரிய விஷயம். இது நம்மால் பெரியபெரிய எழுத்தாளர்கள் என்று போற்றப்படுபவர்களுடைய எழுத்துக்கும்கூட இந்த நிலைமைதான். ஆனால் அண்ணாவினுடைய சிறுகதைகள் இதற்கு நேர்மாறான குணத்தைக் கொண்டிருக்கின்றன. அரைநூற்றாண்டு காலத்திற்கு மேலாகியும் அவருடைய கதைகளைப் படிக்க முடிகிறது, ரசிக்க முடிகிறது என்பதோடு அக்கதைகள் இக்காலத்திற்கும் பொருத்தமானதாக, தேவையானதாக இருக்கிறது என்பது ஆச்சரியமான விஷயம். சராசரி சம்பவ நிகழ்வைப் பதிவு செய்திருந்தால் ஒரு கதைசொல்லியின் வேலையை மட்டுமே செய்து, அதிலேயே திருப்தி அடைந்திருந்தால் அவருடைய கதைகள் இன்று பேசுபொருளாக இருந்திருக்காது.
அண்ணா எழுத ஆரம்பித்த காலத்திலும், எழுதிக்கொண்டிருந்த காலத்திலும் நான்குவிதமான கதை எழுதும் போக்குகள் இருந்தன. தனிமனிதப் பிரச்சினைகள், சிக்கல்கள், பிடுங்கல்கள், மனப்போராட்டங்கள், உளவியல் பிரச்சினைகள், குடும்ப உறவுகளுக்கிடையிலான மோதல்கள், சிடுக்குகள், விரக்தி, நம்பிக்கையின்மை, மனக்குழப்பங்களை, சீர்குலைவுகளைப் பதிவு செய்வது என்று ஒரு பிரிவினர் இருந்தனர். இவ்வகையான எழுத்துகளையே இலக்கியமாக இலக்கியவாதிகள் அங்கீகாரம் செய்தனர்.
தனிமனித பிரச்சினைகளையும் சமூகப் பிரச்சினை களையும் பதிவு செய்வதுதான் எழுத்தாளனின் வேலை. அதில் குறுக்கீடு செய்வதோ, விமர்சனம் செய்வதோ அல்ல என்பது மற்றொரு பிரிவினர்களுடைய எழுத்துப் போக்கு. மது விலக்கு, தீண்டாமை, கதர்இயக்கம், நாட்டுப்பற்று, விடுதலைப் போராட்டம், தேசிய இயக்கம், காந்தியசிந்தனைகளின் அடிப்படையில் எழுதுவது போன்றவை மூன்றாவது பிரிவினருடைய எழுத்து வகை. நடைமுறை சமூகவாழ்வில் இருக்கக்கூடிய அசலான பிரச்சினைகளையும், பிரச்சினை களுக்கான காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் முன் வைத்து எழுதியவர்கள் பலர். அண்ணா நான்காவது வகையைச் சார்ந்தவர்.
அண்ணாவினுடைய சிறுகதைகளின் மையமாக இருப்பது-மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துப் பிரச்சாரம், சாதிப் பிரச்சினைகளுக்கு, மத மோதல்களுக்கு, சமயப் பூசல்களுக்கு, புராண இதிகாசக் கட்டுக்கதைகளுக்கு, பெண்ணுரிமை, வரதட்சணைகொடுமைக்கு, குருட்டுத்தனத்திற்கு, பழமைக்கு, சமூகத்தின் மேல் அடுக்கில் இருப்பவர்கள் சமூகத்தின் கீழ் அடுக்கில் இருப்பவர்கள் மீது செலுத்திய குரூரமான ஒடுக்குமுறைக்கு, சித்திரவதைக்கு எதிரான கருத்துத்தான்.
அவருடைய மொத்த கதைகளின் சாரமும், நோக்கமும் சமூக மேம்பாடு, முன்னேற்றம். சமூகத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதுதான். சமூகப்பிரச்னைகளை அண்ணா 113 சிறுகதைகளின் மூலம்அலசி ஆராய்ந்தார் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். அண்ணா தமிழ்மரபின் பிரதிநிதி. தமிழ் வாழ்வு குறித்த மதிப்பீடுகளே அவருடைய கதைகள். சமூகத்தை முன்னேற்றுவதற்கு, விமர்சனம் செய்வதற்கு, பிரச்சாரம் செய்வதற்கான கருவியாகக் கலைப்படைப்புகளைக் கருதினார். இலக்கியம் மக்களுக்கானது, அது மக்களைச் சென்று சேரவேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார். அதனால் தன்னுடைய கருத்தை, சிந்தனையை, எண்ணத்தைப் பரப்புவதற்குத் தகுந்த ஆயுதமாகச் சிறுகதை என்ற வடிவத்தைப் பயன்படுத்தினார்.
சமூகத்தின் மீதான தன்னுடைய விமர்சனத்தை சிறுகதைகளின் வழியே செய்தார். தேவையான இடங்களில் தன்னுடைய விமர்சனத்தைக் கடுமையாகவும் வைத்தார். அவருடைய சிறுகதைகளின் நோக்கமே சமூகத்தினுடைய நியாய அநியாயங்களை விமர்சிப்பதும், விவாதிப்பதும்தான். அவர் வாழ்வை நான்கு சுவர்களுக்குள் காணவில்லை. மாறாகத் தெருவில் கண்டார். தன்னைச் சுற்றியிருந்த சமூக வாழ்வின் ஊடாகப் பயணம் செய்ததின் விளைவாகவும், வரலாற்றின் அடிப்படையிலிருந்தும், கோட்பாட்டின் அடிப்படையிலிருந்தும் உருவானதுதான் அண்ணாவினுடைய 113 சிறுகதைகளும்.
மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் ‘பரிசு’ என்ற கதையையும், சாதிகள் இந்த மண்ணில் எவ்வளவு ஆழமாக வேர் ஊன்றியிருக்கிறது என்பதற்கு ‘சிங்கள சீமாட்டி’ (1939) என்ற கதையையும், மதப்பூசல்களுக்கு எதிராக ‘மதுரைக்கு டிக்கட் இல்லை’ (4.3.1945) என்ற கதையையும், பேய் பிசாசு போன்ற கட்டுக்கதைகளுக்கு எதிராக ‘யார் மீது கோபித்துக் கொள்வது’ (30.1.1955) என்ற கதையையும், மாந்திரீகத்தினால் ஏற்படும் கேடுகளுக்கு எதிராக ‘விழுப்புரம் சந்திப்பு’ (14.1.1965) என்ற கதையையும் எழுதியுள்ளார்.
முதலாளித்துவத்தின் சுரண்டல் போக்குகளை, கோரச் செயல்பாடுகளை பல்வேறு நிலைகளிலிருந்துஆராய்ந்து ‘செவ்வாழை’ (1.15.1949), ‘ரொட்டித் துண்டு’, ‘பக்த பக்காத் திருடன்’ (11.6.1950), ‘பூபதியின் ஒரு நாள் அலுவல்’ (7.7.1946), ‘பொய்-லாப நஷ்டம்’ (18.11.1945), ‘நாடோடி’ (17.11.1945), ‘உடையார் உள்ளம்’ (14,01. 1966) என்ற சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இந்த நாட்டில் வரதட்சணை கொடுமையினால் எத்தனை பெண்களுடைய வாழ்க்கை சீர்கெட்டுப் போகிறது என்பதற்கு ஒரு உதாரணமாக ‘சோணாச்சலம்’ (20.09. 1947) என்ற கதையை எழுதியுள்ளார். பெண்களும் மனித உயிர்களே, அவர்களுக்கும் சகல உரிமைகளோடு வாழ்வதற்கு உரிமை உண்டு என்பதோடு பெண்கள் படும் அல்லல்களை, துன்பங்களை விவரிக்கும் விதமாக ‘வாலிப விருந்து’, ‘சுடுமூஞ்சி’ (3.2.1946), ‘கன்னி விதவையானாள்’ (14.1.1961) ஆகிய கதைகளையும் எழுதியுள்ளார்.
சகல விதமான மூடத்தனங்களுக்கும், சமயப்பூசல்களுக்கும், ஏமாற்று வேலைகளுக்கும், கட்டுக்கதைகளுக்கும், கீழ்மைத் தனங்களுக்கும், மோசடி கபட நாடகங்களுக்கும் பிராமணியமே அடிப்படையான காரணம் என்பதைத் தோலுரித்து காட்டும் விதமாக ‘அறுவடை’ (14.1.1955), ‘பேரன் பெங்களுரில்’, ‘மேலதிகாரி’ (15.1. 1956), ‘சொல்வதை எழுதேண்டா’ (24.2.1946) ஆகிய சிறுகதைகளை எழுதியுள்ளார். காதல் என்ற பெயரால் நடக்கும் மோசடிக்கும், கபட நாடகத்திற்கும் ஆளாகி அவதிப்படும் பெண்களுடைய வாழ்வை சித்தரிக்கும் விதமாக ‘தங்கத்தின் காதலன்’ (1939), ‘புரோகிதனின் புலம்பல்’, ‘அவள் மிகப் பொல்லாதவள்’ (18.6. 1939), போன்ற கதைகளை எழுதியுள்ளார். இக்கதைகளில் வரக்கூடிய மோகனா, ஏமலதா, சரசா போன்ற பெண்களுடைய வாழ்க்கை சீர்கெட்டது போல இன்றும் காதல் என்ற கபட நாடகத்தால் அல்லலுறும் எத்தனையோ பெண்களுடைய வாழ்க்கையை நாம் பார்க்கவே செய்கிறோம்.
ஏழைகளின் மீதான பணக்காரர்களுடைய அன்பு, இரக்கம் பச்சாதாபம் என்பதெல்லாம் நாடகமே என்பதை ‘இரு பரம்பரைகள்’ (6.1.1946) என்ற கதையில் காண முடியும். பெண்களுடைய உரிமைக்காகவும், வாழ்விற்காகவும் குரல் கொடுப்பதோடு பெண்ணிய நோக்கில் ‘அவள் விபச்சாரியானாள்’(7.11.1946), ‘வழுக்கி விழுந்தவள்’ (14.01.1965) ஆகிய கதைகளையும் எழுதியுள்ளார்.
அண்ணாவினுடைய சிறுகதைகள் நடைமுறை வாழ்வியல் சிக்கல்கள், பிரச்சினைகளை மட்டும்தான் உரத்தக் குரலில் பேசும் என்பதில்லை. வரலாறுகளையும், வரலாற்றில் நடந்துள்ள மோசடி களையும், ஏமாற்று சித்து வேலைகளையும் தர்க்கப்பூர்வமாக ஆராயும் என்பதற்கு ‘புலிநகம்’ (20.1.1946), ‘பிடி சாம்பல்’ (18.5.1947), ‘திருமலை கண்ட திவ்விய ஜோதி’ (13.1.1952), ‘தஞ்சையின் வீழ்ச்சி’, ‘வெளியூரில் கொலம்பசு’ போன்ற கதைகளை உதாரணமாகச் சொல்லலாம்.
வரலாற்று அறிவு மட்டுமல்ல, சமூகத்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகள், சம்பவங்கள் குறித்து அறிவும் தெளிவும் அண்ணாவுக்கு இருந்தது என்பதற்குச் செய்தித் தாள்களில் வந்த விஷயங்களை வைத்தே ‘மானநஷ்ட வழக்கு’, ‘ஒருவன்தான் பிடிபட்டான்’, ‘சமயபுரத்தம்மன்’ ஆகிய கதைகளை எழுதியுள்ளதே சாட்சி, அண்ணாவினுடைய 113 சிறுகதைகளையும் படித்து முடித்த பிறகு அவருடைய பரந்துபட்ட அறிவு வீச்சு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அதோடு அவர் தொடாத விஷயங்கள் என்று எதுவுமில்லை என்பதும், ஒரு கதையினுடைய சாயலை மற்றொரு கதையில் காண முடியாது என்பதும், அவருடைய எழுத்தின் மேன்மைக்குச் சான்று.
அண்ணாவின் சிறுகதைகளினுடைய கரு, அமைப்பு, நோக்கம், உள்ளடக்கம், வெளிப்பாட்டுத் திறன், ஆளுமை, மொழி போன்றவற்றை வைத்து மூன்று வகைகளாகப் பிரிக்க முடியும். அது தொடக்ககாலச் சிறுகதைகள், இடைக்காலச் சிறுகதைகள், கடைசிக்காலச் சிறுகதைகள், தொடக்ககாலக் கதைகளில் பசி, வறுமை, நோய், அறியாமை, சாதி மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், உழைப்புச் சுரண்டல்கள் போன்ற பிரச்னைகளை நேரிடையாகவும், அப்பட்டமாகவும் பேசியதோடு அதற்கானத் தீர்வுகளையும் முன் வைத்தார்.
பொதுவாக தமிழ் இலக்கிய உலகம் பிரச்சினை களையும், பிரச்சினைகள் உருவாவதற்கான காரணிகளையும் ஆராயும். ஆனாலும் முடிவை வாசகனுடைய தீர்மானத்திற்கு விட்டுவிடும். இதற்கு நேர்மாறான குணத்தை அண்ணாவினுடைய தொடக்ககாலக் கதைகள் கொண்டிருந்தன. இந்நிலைப்பாட்டை கதைக்குச் சாதகமாகவும் கொள்ள முடியும், பாதகமாகவும் கொள்ள முடியும். இடைக்காலக் கதைகள் பிரச்சினை களை விரிவாகவும் ஆழமாகவும் ஆராய்ந்தது.இக்கதைகள் தீர்வை, முடிவை முன்வைப்பதற்குப் பதிலாக விவாதத்தையும் தர்க்கத்தையும் முன்வைத்தன. கடைசிக்காலக் கதைகளில் கருவுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் வடிவம், செய்நேர்த்தி, சொல்முறை, நுட்பம், செறிவு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.கடைசிக்கால கதைகளில்தான் அண்ணா உளவியல் சார்ந்த கதைகளான ‘ராஜபார்ட் ரங்கத்துரை பாகவதத்’ (6.6.1948), ‘மரத்துண்டு’ போன்றவற்றை எழுதினார். இக்காலத்தில்தான் அவர், ‘பேய் ஓடிப்போச்சி’ (31.8.1947), ‘சாது’ (16.11.1947) போன்று உருவகக் கதைகளையும் எழுதினார். இக்கதைகளில் முதிர்ச்சியையும், தேர்ச்சியையும் காண முடியும். இதே காலத்தில்தான் அவர் பாத்திரச் சித்தரிப்புக்கு ‘உபகாரி உலகநாதன்’ (26.7. 1964), ‘பித்தளையல்ல பொன்னேதான்’ (14.1.1965), ‘சுமார் சுப்பையா’ (14.1.1965), ‘சொக்கி’ (13.6.1965), ‘உடை போட்டதும்’ (14.1.1965) போன்ற கதைகளையும் எழுதியுள்ளார். ஒப்பீட்டு முறையிலான கதைகளையும் எழுதியுள்ளார். ஒரு எழுத்தாளனுடைய வாழ்க்கையில் வளர்ச்சிப் படிநிலைகள் தவிர்க்க முடியாதவை. இந்த வளர்ச்சிப் படிநிலைகள்தான் ஒரு எழுத்தாளனுடைய எழுத்தின் வலிமையைக் காட்டும்.
அண்ணாவினுடைய சிறுகதைகள் எல்லாமே அவருடைய இயக்க செயற்பாடுகளில் ஒன்றாகத்தான் இருந்தது. அவருடைய அரசியல் பார்வைதான் சமூகத்தைக் கூர்ந்து பார்க்க வைத்தது. அதனால் தான் அவருடைய எழுத்து உலகம் பரந்து விரிந்ததாகவும் இருந்தது. அதனால்தான் அவருடைய சிறுகதைகள் தினசரி வாழ்க்கையின் நிகழ்வுகளால் நிரம்பியதாக - அன்றாட வாழ்க்கையின் பிரதிபலிப்பாக இருந்தது. காலத்தின் பதிவாகவும் இருந்தது.
அண்ணாவினுடைய சிறுகதைகள் பிரச்சா ரத்திற்காக எழுதப்பட்டிருந்தாலும் அவருடைய சிறுகதைகள் -சிறுகதைகளுக்குரிய எல்லாக் குணத்தையும் கொண்டிருந்தன என்பதை மறுக்கமுடியாது: தெளிவான நடை, குறிப்பாக உணர்த்துதல், நுட்பமாகச் சித்தரித்தல், எள்ளல், அங்கதம், ஒப்பீடு, நகைச்சுவை,உருவகம், கவிதைக் குணம் கொண்ட வாக்கியமைப்புகள் என்று அனைத்துக் கூறுகளும் நிறைந்திருப்பதைக் காண முடியும். அதே நேரத்தில் திரித்துக் கூறுதல், சுற்றி வளைத்துப் பேசுதல் என்பது அவருடைய சிறுகதைகளில் காண முடியாத ஒன்று. சிறுகதைகளில் சோதனை முயற்சியாக கற்பனைச் சித்திரம் என்ற வடிவில், படிப்பவர்களுக்கு அயர்ச்சி ஏற்படாதவாறு பிரார்த்தனை (14.3.1943), வள்ளித் திருமணம் (28.3.1943), பிரசங்க, பூஷணம்’ (4.2.1945), வேலைப் போச்சு (17.2.1946), நாட்டில் காடு (2.3.1947) ஆகிய கதைகளையும் எழுதினார்.
பழைய மரபுகளை உதறித்தள்ளி புதிய மரபுகளை உருவாக்கிய சிறுகதைகள் அண்ணாவினுடையது. பிறரால் எளிதில் பின்பற்ற முடியாத நடை அவருடையது. சிறுகதைக்குரிய எல்லா குணங்களும் சிறப்பாக இருந்தும் நம்முடைய ஆச்சாரமான இலக்கிய விமர்சகர்கள் அண்ணாவினுடைய சிறுகதைகளை கொள்கை முழக்கங்களாக மட்டுமே பார்த்தார்கள். நம்முடைய விமர்சகர்கள் ஒரு படைப்பை அதனுடைய தரத்தை வைத்து மதிப்பிடாமல் அந்தப் படைப்பை எழுதிய எழுத்தாளனுடைய சாதி, அவன் சார்ந்துள்ள கட்சி, அவனுடைய பின்னணி போன்றவற்றை வைத்தே மதிப்பிடுகிறார்கள். இப்படிச் செய்வதற்குப் பெயர்இலக்கிய விமர்சனம் அல்ல. இக்கொடுமை அண்ணாவினுடைய சிறுகதை களுக்கும் நேர்ந்தது. புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் தாண்டி அவருடைய கதைகள் இன்றும் பேசப்படுவதற்குக் காரணம் அக்கதைகளினுடைய பலம்தான். தனிமனித துக்கத்தை, சிக்கல்களை, பிரச்சினைகளை அண்ணா எழுதவில்லை, இதுதான் அவருக்கும் மற்ற எழுத்தாளர்களுக்குமுள்ள வேறுபாடு. சமூகக் கொடுமைகளுக்கு எதிரானது அவருடைய சிறுகதைகள். அக்கதைகள் சராசரியான கதைகளாக இல்லாமல் கலகக் குரலாக இருந்தது. முதல் கதையிலிருந்து கடைசி கதை வரை அவருடைய கலகக் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஏனென்றால் வாழ்வினுடைய நெருக்கடியிலிருந்து, சமூகத்தினுடைய நெருக்கடியிலிருந்து உருவானது அவருடைய சிறுகதைகள்.
எழுத்தாளனுக்கும், சமூகத்திற்குமான உறவு என்ன? ஒரு எழுத்தாளன் அவன் வாழ்கிற காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் என்ன என்ற கேள்விகளுக்கு அண்ணாவினுடைய சிறுகதைகளில் பதில் இருக்கிறது. அவருக்குத் தெளிவான நோக்கம் இருந்தது. அந்த நோக்கத்திலிருந்தும் லட்சியத்திலிருந்தும் தான் அவருடைய சிறுகதைகள் உருப்பெற்று வந்தன. நோக்கமில்லாமல், குறிக்கோள் இல்லாமல் எழுதப்படுகிற இலக்கியப் படைப்புகளுக்கு சமூகத்தில் என்ன மதிப்புஇருக்க முடியும்? இந்நிலையிலிருந்துதான் அண்ணாவினுடைய சிறுகதைகளை மதிப்பிட வேண்டும்.
அண்ணா எந்தெந்தப் பிரச்சினைகள் தீர வேண்டும், ஒழிக்கப்பட்ட வேண்டும் என்று எழுதினாரோ அந்தப் பிரச்சினைகள் இன்றுவரை ஒழிந்தபாடில்லை. சாதிக் கொடுமை, தீண்டாமை, பசி, பிணி, வறுமை, அறியாமை, பொய்மை, போலித்தனம், சமயப்பூசல், இளமை மணம், காதலுக்குத் தடை, தெய்வத்தின் பெயரால் ஏற்பட்ட கட்டுக்கதைகள், புராண, இதிகாச புரட்டுகள் போன்ற பிரச்சினைகள் இந்த மண்ணில் இருக்கும் வரை - வைதீகச்சூழ்ச்சியின் பிடியில் தமிழ்ச்சமூகம் சிக்கித் தவிக்கும் வரையில் சமூகத்தைச்சீர்குலைக்கக்கூடிய பிரச்சினைகள் இருக்கும்வரை - அண்ணாவினுடைய சிறுகதைகளும் இருக்கும்.
Comments
Post a Comment